ஈரோடு: உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கி கலெக்ஷன் பார்க்க சுயேச்சைகள் மற்றும் லெட்டர் பேடு கட்சிகளை சேர்ந்த பலர் தயாராகின்றனர்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றத் துவங்கிவிட்டனர். எனினும், ஒவ்வொரு கட்சியிலும், எப்படியும் 'சீட்' வாங்கிவிட வேண்டுமென அக்கட்சி பிரமுகர்களும் காய் நகர்த்தி வருகின்றனர். மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடத்துவதால், வலுவான கூட்டணியில்லாவிட்டாலும், தனிப்பட்ட செல்வாக்கு, பண பலத்தை வைத்து மோதி பார்த்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பில், சில மாநகராட்சி, நகராட்சிகளில், தி.மு.க., மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களும் சீட் வாங்குவதில் பெரிதும் ஆர்வமாக உள்ளனர். வார்டு கவுன்சிலர் பதவியை பிடிக்க வேண்டுமென அரசியல் கட்சியினர் தவிர தங்களது பகுதி யில் ஓரளவு செல்வாக்கு உள்ளவர்களும், களமிறங்குவதற்கான பூர்வாங்கப் பணிகளை துவங்கியுள்ளனர்.
தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெறும் எண்ணத்தில் பணிகளை மேற்கொள்வோர் ஒருபுறமிருக்க, கலெக்ஷன் பார்க்கும் நோக்கத்திலும் பலர் களமிறங்க தயாராகி வருகின்றனர். வழக்கத்தை விட இம்முறை கலெக்ஷன் வேட்பாளர்கள் அதிகரிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஒரு வார்டில் தொண்டு நிறுவனம், சேவை அமைப்பு, ஜாதி அமைப்பு போன்றவை மூலம், மக்களிடம் ஓரளவு அறிமுகம் கிடைத்த பலர், இதுபோன்ற வேலையில் இறங்க தயாராக உள்ளனர். இவர்கள் போட்டியிடும் போது, வெற்றிவாய்ப்புள்ள கட்சி அல்லது சுயேச்சை வேட்பாளரின் ஓட்டுக்கள் பிரியும் நிலை ஏற்படும். இதை பயன்படுத்தி ஒரு தொகையை சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் கறந்து கொண்டு, கடைசி நேரத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்துவிட திட்டமிட்டுள்ளனர். இதேபோல், தங்கள் பகுதியில் ஓரளவு அறிமுகமான லெட்டர் பேடு கட்சியினரும் இவ்வகை கலெக்ஷனை எதிர் நோக்கியுள்ளனர்.