சென்னை,: சென்னையின் மையப்பகுதியில், முதல்முறையாக நடக்க இருந்த பார்முலா -4 ரேஸ் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.இதனை நடத்துவதற்கான சான்றிதழை இரவு 8 மணிக்குள் பெற வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் பார்முலா 4 ரேஸ் நடத்த சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு(எப்.ஐ.ஏ) 3 ஆண்டுகள் (2027 வரை) நடத்த அனுமதி வழங்கி உள்ளது. இந்த போட்டிகள் இரவு 7 மணிக்கு துவங்கி இரவு 10.45 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பந்தயத்திற்கான சர்க்யூட்டில் மாற்றங்கள் இருந்தால் எப்.ஐ.ஏ.,க்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், பார்முலா 4 கார் ரேஸ் இன்று துவங்கி, நாளை நிறைவுறுகிறது. சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள 3.5 கி.மீ., துார சாலையில், இரவு நேர போட்டியாக நடக்கிறது. இதில், 19 திருப்பங்கள், அதிவேக நேர் வழிகளுடன் பந்தய பாதை அமைந்துள்ளது. இதை, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், ரேசிங் புரோமோட்டர்ஸ் என்ற தனியார் அமைப்பும் இணைந்து நடத்துகின்றனர். இதை, 9,000 பேர் பார்க்க உள்ளனர்.இந்நிலையில், சென்னையில் மழை காரணமாக போட்டியை நடத்துவதற்கான எப்.ஐ.ஏ., சான்றிதழை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், அவகாசம் கேட்டு தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது.இதனை அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் பாலாஜி, சுரேஷ்குமார் அமர்வு இந்த சான்றிதழை பெற இரவு 8 மணிக்குள் பெற வேண்டும். போட்டியை பார்க்க ஏராளமானோர் வந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.போட்டியை நடத்தும் தனியார் நிறுவனம், மழை காரணமாக தாமதம் ஏற்பட்டதாகவும், சான்று மறுக்கப்பட்டால், போட்டி தள்ளி வைக்கப்படும் என தெரிவித்தார்.போட்டி துவங்குவதற்கு முன்னர் எப்ஐஏ சான்றிதழ் பெறப்படும் என உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இதனிடையே, கார் பந்தயம் நடத்துவதற்காக எப்ஐஏ முதற்கட்ட சான்றிதழை அளித்து உள்ளது.இதுகுறித்து, தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா நேற்று அளித்த பேட்டி:பெரும் முயற்சியுடன், சென்னையில் இந்த கார் ரேஸ் நடத்தப்படுகிறது. இது, நாட்டிற்கும், தமிழகத்தின் சென்னைக்கும் பெருமை சேர்க்கும். உலக மோட்டார் ஸ்போர்ட்ஸ் வரைபடத்தில், சென்னையும் இடம்பெற வாய்ப்பாக அமையும்.பார்வையாளர்களுக்கு, 'த்ரில்'லான அனுபவத்தை வழங்க உள்ள இந்த பந்தயத்தில் கார்கள் 200 கி.மீ., வேகத்தில் செல்லும். இதில், வீரர்களின் திறமை, சாதுர்யம் வெளிப்படும். வரலாற்று சிறப்பு மிக்க கோட்டை, மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களை சுற்றி நிகழும் இதில், பார்வையாளர்கள், வீரர்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
அணிகள்
ரேஸிங் புரமோட்டார்ஸ் பி.லிட்., நிறுவனத்தின் தலைவர் அகிலேஷ் ரெட்டி கூறுகையில், ''இது, சர்வதேச வீரர்களுக்கும், சென்னை ரசிகர்களுக்கும் புதிய அனுபவத்தை தரும்,'' என்றார்.சென்னை டர்போ சார்ஜர்ஸ், கோவா ஏசஸ் ஜே.ஏ., ரேசிங், ஸ்பீட் டெமான்ஸ் டில்லி, பெங்களூரு ஸ்பீட்ஸ்டெர்ஸ், ஷ்ராசி ரார் பெங்கால் டைகர்ஸ், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ் ஆகிய ஐ.ஆர்.எல்., அணிகளுடன், ஆமதாபாத் அபெக்ஸ் ரேசர்ஸ், காட்ஸ்பீட் கொச்சி ஆகிய அணிகளும் இணைந்து இதில் பங்கேற்கின்றன.
நான் 3 வயதில், எலும்புகள் வலுவழந்ததால், முட்டிக்கு கீழான கால்களை இழந்தேன். தன்னம்பிக்கையை இழக்காமல், பல்வேறு பயிற்சியின் வாயிலாக, சாதாரண மனிதர்களுடன் போட்டியிட கற்றுக்கொண்டேன். 18 ஆண்டுகளாக, பல்வேறு கார் பந்தயங்களில் பங்கேற்றுள்ளேன். இருங்காட்டுக்கோட்டையில் அனைத்து விதமான பந்தய கார்களிலும் பயிற்சி பெற்றேன்.- சேத்தன் கொரடா,
சென்னை வீரர்.
நான் விளையாட்டில் பயிற்சி பெற்ற போது, இந்த பந்தயத்தில் ஆண்கள் தான் கோலோய்ச்சினர். தற்போது, நிலைமை மாறி உள்ளது. நிறைய பெண்கள் ஆர்வமுடன் கார் பந்தயத்தில் பயிற்சி பெற்று, சாதித்து வருகின்றனர். இதில் பங்கேற்பது எனக்கு பெருமையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.-- செக் குடியரசு வீராங்கனை- கேப்ரியேலா ஜிகோவா, கோவா ஏசஸ் அணி
ரசிகர்கள் கேலரி
* இந்த போட்டிகளை காண, பாக்ஸ் ஆபீஸ் 1 டிக்கெட் எடுத்துள்ள ரசிகர்கள், முத்துசாமி சாலை பாலத்தின் வழியாக, 2ம் எண் வாயிலில் நுழைந்து கிராண்ட் ஸ்டாண்ட் 1ல் அமரலாம்.* பாக்ஸ் ஆபீஸ் 3 டிக்கெட் எடுத்துள்ளோர், வாலாஜா சாலையின் பிரஸ் கிளப் சாலை வழியாக சென்று, கலைவாணர் அரங்க மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு, 2, 3, 4, 5வது ஸ்டாண்டுகளில் அமரலாம்.* பாக்ஸ் ஆபீஸ் 5 ல், கோல்ட், பிளாட்டினம், பிரீமியம் டிக்கெட்டுகளை பெற்றோர் அமரலாம். இதனை அடைய சென்னை பல்கலையில் வாகனங்களை நிறுத்தி, காமராஜர் சாலையில் செல்ல வேண்டும்.