உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தந்தை, மருமகனை கொன்ற பிசியோதெரபிஸ்ட் ஆயுள் ரத்து

தந்தை, மருமகனை கொன்ற பிசியோதெரபிஸ்ட் ஆயுள் ரத்து

சென்னை : புதுச்சேரியில், தந்தை மற்றும் அக்காவின் மகனை கொன்ற வழக்கில், 'பிசியோதெரபிஸ்ட்'டுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.புதுச்சேரி கோரிமேட்டை சேர்ந்தவர் செல்வராஜ், 75. முன்னாள் ராணுவ வீரர்; இவரின் மனைவி வசந்தா, 65. இவர்களது மகள் ஷகிலா, 43; மகன் சிவகுமார், 42. பிசியோதெரபிஸ்டாக சிவகுமார் பணிபுரிந்து வந்தார். ஷகிலாவின் மகன் பரத்குமார், 14, தாத்தா செல்வராஜ் வீட்டில் தங்கி படித்து வந்தார். செல்வராஜ் தன் மனைவி வசந்தா பெயரில் உள்ள வீட்டை, பேரன் பரத்குமாருக்கு எழுதி வைக்கும்படி கூறி, அவரிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். 2017 ஏப்ரல், 15ல் நடந்த தகராறில், தந்தை செல்வராஜ், அவரது பேரன் பரத்குமாரை, மகனான சிவகுமார் கத்தியால் குத்திக் கொன்றார். இதுதொடர்பாக, புதுச்சேரி போலீசார் வழக்கு பதிந்து, சிவகுமார், அவரது தாயார் வசந்தா ஆகியோரை கைது செய்தனர்.விசாரணையில், தந்தை மற்றும் மருமகனை கொன்ற சிவகுமார், இருவரின் பிணத்தையும் வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு தலைமறைவாகி உள்ளார். இரண்டு நாட்களுக்கு பின் வீடு திரும்பி, உடல்களை துண்டு துண்டாக வெட்டி, ஏழு சாக்கு பைகளில் கட்டி, தமிழகத்தின் பூத்துறை பகுதியில் வீசியது தெரியவந்தது.அப்போது, மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த கொலை வழக்கை விசாரித்த புதுச்சேரி நீதிமன்றம், சிவகுமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து, 2019 டிசம்பர், 12ல் உத்தரவிட்டது. வசந்தா விடுதலை செய்யப்பட்டார்.இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவகுமார் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.சிவகுமார் தரப்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ''வழக்கின் முதல் சாட்சியான மனுதாரரின் சகோதரியும், மற்ற சாட்சிகளில் ஓரிருவரும் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர். போலீஸ் தரப்பு சாட்சிகளின் வாக்குமூலத்திலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. பலரது சாட்சியங்கள் நம்பும்படியாக இல்லை,'' என்றார்.இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:வழக்கில் மனுதாரர் மீது அதிக சந்தேகங்கள் இருந்த போதிலும், அவர் மீதான குற்றச்சாட்டை போலீசார் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறி விட்டனர். கொலைக்கான நோக்கத்தை நிரூபிக்க, பக்கத்து வீட்டாரின் சாட்சியம் மட்டும் போதுமானதல்ல. மற்ற காரணிகளும், முன் விவாதிக்கப்பட்டபடி போலீசாரால் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. எனவே, விசாரணை நீதிமன்றம், 2019ல் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

VinothB
ஜூன் 24, 2024 11:24

தீர்ப்பு வழங்கிய பிரகஸ்பதி பெயர் மற்றும் புகைப்படம் வெளியிட்டால் ... க்கு வசதியாக இருக்கும்.


Jysenn
ஜூன் 24, 2024 06:52

சபாஷ். சரியான தீர்ப்பு .கள்ளக்குறிச்சி சாராய வியாபாரிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் தீரப்பு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை