சென்னை:கேள்வி நேரத்தில், அ.தி.மு.க., உறுப்பினர்கள் கந்தன், அசோக், வைரமுத்து, தே.மு.தி.க., உறுப்பினர் சுபா ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகள்:* திருமயம், பொன்னமராவதி, அரிமழம் ஆகிய ஒன்றியங்களில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகள் துவங்கியுள்ளன. விரைவில், பணிகள் துவங்கும். -முனுசாமி, உள்ளாட்சித் துறை அமைச்சர்.
* சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட கோவிலம்பாக்கம் ஊராட்சி, சுண்ணாம்பு கொளத்தூரில் உள்ள காகிதபுரம், பாக்கியலட்சுமி நகர், பவானி நகர், மணிமேகலை நகர், ராஜா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள ஓடைகளை சீரமைத்து, இரு கரைகளும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். -ராமலிங்கம், பொதுப்பணித்துறை அமைச்சர்.* கங்கவல்லி தொகுதியைச் சேர்ந்த வட சென்னிமலை முருகன் கோவிலை சுற்றுலாத் தலமாக அறிவிப்பது குறித்து, அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறித்து, மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கையை பெற்றதும், அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.-கோகுல இந்திரா, சுற்றுலாத்துறை அமைச்சர்.* சுற்றுலா தலமான ராமேஸ்வரம் நகரை மேம்படுத்த, மத்திய அரசு ஒதுக்கிய நிதியில், முந்தைய தி.மு.க., அரசு முறைகேடு செய்தது குறித்து, 15 நாட்களாக பல செய்திகள் வருகின்றன. பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இது குறித்து விரிவாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.-கோகுல இந்திரா, சுற்றுலாத்துறை அமைச்சர்.* சென்னை வேளச்சேரி ஏரியை சீர்செய்து, படகு குழாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.-கோகுல இந்திரா, சுற்றுலாத் துறை அமைச்சர்.* மணப்பாறையில் இருந்து, சென்னைக்கும், தொழில் நகரமான திருப்பூருக்கும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.-செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறை அமைச்சர்.