சென்னை:அமராவதியின் துணை நதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை குறித்த முழு விபரங்களை தாக்கல் செய்ய, கேரளாவுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுஉள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் பகுதியில், சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதுகுறித்து, பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தாமாக முன்வந்து தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. அப்போது, 'சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவில்லை. 'ஜல்ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ், மலை கிராமங்களுக்கு குடிநீர் வழங்க, சிலந்தி ஆற்றின் குறுக்கே, 1 மீட்டர் உயரத்தில் தடுப்பு மட்டுமே அமைக்கப்படுகிறது' என, கேரள அரசு வாதிட்டது.இந்த வழக்கு, தீர்ப்பாயத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. முழுவிபரங்கள்
அப்போது ஆஜரான கேரள அரசு வழக்கறிஞர், 'காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, கேரளத்தின் பங்கான மூன்று டி.எம்.சி.,க்குள் வரும் தண்ணீரை, குடிநீர் தேவைக்காக எடுக்கவே சிலந்தியாற்றில் கலிங்கு எனப்படும் தடுப்பு அமைக்கிறோம்' என்றார்.அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர் சண்முகநாதன், 'சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விபரத்தையே, தமிழக அரசுக்கு கேரளா தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கும்போது, மூன்று டி.எம்.சி., நீரைத்தான் எடுப்பர் என்பதை எப்படி நம்புவது? 'தண்ணீர் மிகப்பெரிய பிரச்னை. எதிர்காலத்தில் தண்ணீருக்காகத்தான் மூன்றாம் உலகப்போரே நடக்கும் என்கின்றனர். எனவே, கேரள அரசு கட்டும் தடுப்பணை பற்றிய முழுவிபரங்கள் தெரிந்தாக வேண்டும்' என்றார். உத்தரவு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவு:காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முன் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து கேரளா அறிக்கை அளிக்க வேண்டும்.சிலந்தி தடுப்பணை உட்பட பாம்பாறு துணைப் படுகையில் கேரள அரசு இதுவரை கட்டியுள்ள மற்றும் கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ள தடுப்பணை விபரங்கள் குறித்தும், முழு விபரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை, கேரள அரசு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.வழக்கு விசாரணையை, செப்டம்பர் 4க்கு தள்ளிவைத்தனர்.