போக்குவரத்து கழகங்களுக்கு 19 விருதுகள் அறிவிப்பு
சென்னை: நாட்டில் உள்ள அனைத்து மாநில சாலை போக்குவரத்து கழகங்களின், வளங்கள் மற்றும் செயல்திறனை ஆராய்ந்து, பொதுவான கட்டமைப்பின் கீழ் கொண்டு வரும் வகையில், அனைத்து இந்திய மாநில சாலை போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இக்கூட்டமைப்பில் உறுப்பினர்களாக, 70 போக்குவரத்து கழகங்கள் உள்ளன.இந்த கூட்டமைப்பு வழங்கும் விருதை தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள், ஒவ்வொரு ஆண்டும் பெற்று வருகின்றன. அந்த வகையில், 2023 - -24ம் ஆண்டுக்கான விருதுகளில், 19 விருதுகள் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகளை, டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் கவர்னர் கிரண்பேடியிடம் இருந்து, சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக தலைமை அதிகாரிகள் மோகன், நடராஜன் உள்ளிட்டோர் பெற்றனர்.