உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் பத்திரமாக மீட்பு

உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் பத்திரமாக மீட்பு

சென்னை: உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய, தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களுடன் மொபைல் போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'தைரியமாக இருங்கள். உங்களை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன' என்று ஆறுதல் கூறினார்.கடலுார் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 17 பெண்கள் உட்பட 30 பேர், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஆதி கைலாஷ் கோவிலுக்கு, கடந்த 1ம் தேதி ஆன்மிக சுற்றுலா சென்றனர். கோவிலில் சுவாமி தரிசனத்தை முடித்து புறப்பட்ட போது, கோவிலில் இருந்து, 18 கி.மீ., தொலைவில், தவாகரன் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதி சாலை மூடப்பட்டது.சுற்றுலா சென்ற 30 பேரும், அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். தங்கள் உறவினர்களுக்கு தகவல் அனுப்பினர். அவர்கள், விவசாய அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் தகவல் தெரிவிக்க, அவர் கடலுார் கலெக்டரை தொடர்பு கொண்டு, உத்தரகண்ட் நிலச்சரிவால் வர முடியாமல் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.கலெக்டர் ஆதித்யா செந்தில்குமார் மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகள், உத்தரகண்ட் மாநில அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி, ராணுவத்தினர் உதவியுடன், அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர். 30 பேரும் நேற்று மாலை பத்திரமாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.குழுவில் இடம் பெற்றிருந்த பராசக்தி என்பவருடன், முதல்வர் ஸ்டாலின் நேற்று மொபைல் போனில் பேசினார். அப்போது, தங்களை மீட்க உதவிய முதல்வருக்கு அவர் நன்றி தெரிவித்தார். அதற்கு ஸ்டாலின், 'அனைவரும் தைரியமாக இருங்கள். நீங்கள் சென்னை வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என்று ஆறுதல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ