உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 31,239 வீடுகளை சீரமைக்க கெடு

31,239 வீடுகளை சீரமைக்க கெடு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில், ஏழை மக்களுக்கான வீட்டு வசதியை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அளித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் நிதியில், இதற்கான கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், தமிழகம் முழுதும், 1.98 லட்சம் வீடுகள் அடுக்குமாடிகளாக கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளில், மிக மோசமாக சேதமடைந்த குடியிருப்புகளை இடித்து விட்டு, புதிதாக கட்டும் திட்டங்களை, வாரியம் தனியாக மேற்கொண்டு வருகிறது. இதுதவிர, அடிப்படை வசதிகளை சீரமைத்தால் போதும் என்ற நிலையில் உள்ள திட்டங்கள், தனியாக பிரிக்கப்பட்டுள்ளன.இந்த வகையில், 79 அடுக்குமாடி திட்டங்களில், 31,239 வீடுகளை சீரமைக்க முடிவானது. இதில், சென்னை, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், 65 அடுக்குமாடி திட்ட பகுதிகளில், 26,483 வீடுகளை சீரமைக்க, 68.72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இதேபோல, சென்னையில், 14 இடங்களில், 4,756 வீடுகளின் சீரமைப்பு பணிகளுக்கு, 13.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்ததாரர்கள், பணிகளை முடிப்பதில் அலட்சியமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், 79 இடங்களில், 31,239 வீடுகளை சீரமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. இந்த பணிகளை ஏற்றுள்ள ஒப்பந்ததாரர்கள், அலட்சியமாக செயல்படுகின்றனர். இந்நிலையில், திட்டப்பகுதி வாரியாக பணிகளின் தற்போதைய நிலவரம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகளை, ஐந்து மாதங்களுக்குள் முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்