சென்னை:தமிழக ரேஷன் கடைகளில், கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்களின் கைரேகை, 'ஆதார்' சரிபார்ப்பு வாயிலாக உறுதி செய்யப்பட்டு, பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக, 35,750 ரேஷன் கடைகளுக்கும், 'பாயின்ட் ஆப் சேல்' எனப்படும், விற்பனை முனைய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், 2017ல் இருந்து, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு, 'ஸ்கேன்' செய்து, பொருட்கள் வழங்கப்படுகின்றன.கடந்த, 2020 அக்டோபர் முதல் கார்டுதாரர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்காக, தனியே கைரேகை கருவிகள் வழங்கப்பட்டன. கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை, சில ஊழியர்கள் வாங்கியது போல் கருவியில் பதிவு செய்து முறைகேடு செய்கின்றனர். பொருட்கள் வழங்கிய உடனே கார்டுதாரர்களின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பியும் பலர் பார்ப்பதில்லை. இதை தடுக்க, கைரேகை பதிவு மட்டுமின்றி, ரசீதும் தரும், 'பிரின்டர்' வசதியுடன் ஒருங்கிணைந்த புதிய கருவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணி, ஓயாசிஸ் என்ற தனியார் நிறுவனத்திடம், 2023 இறுதியில் வழங்கப்பட்டது. அந்நிறுவனம், இந்தாண்டு ஜூனுக்குள், 35,750 கடைகளுக்கும் கருவிகளை வழங்க வேண்டும்.இதன் வாயிலாக, கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்கும் போது, ரசீதை பார்த்து என்னென்ன வழங்கப்பட்டன என்பதை அறிய முடியும். இதுவரை, 2,750 கடைகளுக்கு புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 1,000 கடைகளுக்கு வழங்கும் பணி நடக்கிறது. இப்பணி தாமதமாக நடப்பதால், அடுத்த மாதத்திற்குள் அனைத்து கடைகளிலும் இது பயன்பாட்டுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.