| ADDED : மே 13, 2024 07:40 AM
கூடலுார் : குமுளி மலைப் பாதையில் தமிழக அரசு பஸ் பிரேக் பிடிக்காமல் பாறையில் மோதி நின்றதால் 68 பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., துார மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும்.தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருப்பதால் வாகனப் போக்குவரத்து அதிகம்.நேற்று மதியம் 2:00 மணிக்கு குமுளியில் இருந்து திண்டுக்கல்லுக்கு தமிழக அரசு பஸ் (டி.என்.57, என்.2217) 68 பயணிகளுடன் கிளம்பியது.மலைப்பாதையில் எஸ் வளைவு அருகே வரும்போது பிரேக் பிடிக்காமல் ஓடியது. டிரைவர் சென்றாயன் சாமர்த்தியமாக ரோட்டின் ஓரத்தில் இருந்த பாறையில் மோதி நிறுத்தினார்.வேகமாக வந்ததால் பஸ்சின் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. கண்டக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 2 பேருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. பஸ் திரும்புவதற்கு முன் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்திருந்தால் பலர் உயிரிழந்திருப்பர். அச்சத்தில் மக்கள்
மலைப்பாதையில் தரமாக சீரமைக்கப்பட்ட அரசு பஸ்களை இயக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். மே 9ல் போடி அரசு போக்குவரத்து பணிமனையை சேர்ந்த அரசு பஸ் (டி.என்.57 என். 1995) மலைப்பாதையில் ஆக்சில் கட்டாகி பள்ளத்தில் கவிழாமல் அதிர்ஷ்டவசமாக ரோட்டிலேயே நிறுத்தப்பட்டது. நேற்றும் 68 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் குமுளி மலைப்பாதையில் இயக்கப்படும் காயிலாங்கடை 'டப்பா' பஸ்களை மாற்ற வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.