சென்னை: 'தமிழக உள்மாவட்டங்களில் மே 1 வரை அதிகபட்ச வெப்பநிலை இரண்டு டிகிரி செல்ஷியஸ் வரை படிப்படியாக உயரும். அதிகபட்ச வெப்ப நிலை 3 முதல் 5 டிகிரி செல்ஷியஸ் வரை இயல்பை விட அதிகரிக்கும். ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், மே 1 வரை வறண்ட வானிலை நிலவும். உள் மாவட்டங்களில், மே 1 வரை அதிகபட்ச வெப்ப நிலை 2 டிகிரி செல்ஷியஸ் வரை படிப்படியாக உயரலாம். வடமாவட்டங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 3 முதல் 5 டிகிரி செல்ஷியஸ், இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதாவது ஒரு சில இடங்களில், 39 முதல் 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் நிலவும். .இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 35 முதல் 39 டிகிரி செல்ஷியஸ் இருக்க கூடும். வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், வெப்ப அலை வீசக்கூடும்.மே 2ல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மே 3ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 42 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. திருப்பத்துாரில் 41.6; சேலத்தில் 41.5; கரூர் பரமத்தியில் 41; தர்மபுரியில் 41; திருத்தணியில் 40.4; வேலுாரில் 40.3; திருச்சியில் 40.1; நாமக்கல்லில் 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம்நிலவியது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
83 சதவீதம் மழை குறைவு
மார்ச் 1 முதல் ஏப்ரல் 27 வரை இயல்பாக 54.7 மி.மீ., மழை பெய்யும். இந்த ஆண்டு 9.4 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவை விட 83 சதவீதம் குறைவு.மார்ச் 1 முதல் நேற்று வரை சென்னை, செங்கல்பட்டு, கடலுார், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருப்பூர், திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஒரு மி.மீ., மழை கூட பெய்யவில்லை.அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 69.7 மி.மீ., மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 55.5; விருதுநகர் 31.7; நீலகிரி 30.7; தென்காசி 30; தேனி 22; மதுரை 16.8; துாத்துக்குடி 14.9; ராமநாதபுரம் 14.5 மி.மீ., மழை பெய்துள்ளது.