உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என் வீடு, அலுவலகத்தில் நள்ளிரவு வரை ஆவணங்கள் குறித்து அமீர் பளிச் பதில்

என் வீடு, அலுவலகத்தில் நள்ளிரவு வரை ஆவணங்கள் குறித்து அமீர் பளிச் பதில்

சென்னை:''என் வீடு, அலுவலகத்தில், இரவு 12:00 மணி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, ஆவணங்களை எடுத்துச் சென்றனர்,'' என, திரைப்பட இயக்குனர் அமீர் கூறினார்.தி.மு.க., முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவருமான ஜாபர் சாதிக், 35, டில்லியில் கைதாகி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவரது நெருங்கிய கூட்டாளியான, திரைப்பட இயக்குனர் அமீருக்கு முறைப்படி, 'சம்மன்' அனுப்பி, டில்லியில் உள்ள, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில், 12:00 மணி நேரம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

2ம் கட்ட விசாரணை

ஜாபர் சாதிக், அமீர், இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த புஹாரி ஹோட்டல் அதிபர் இர்பான் புஹாரி உள்ளிட்டோர், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அமலாக்கத் துறை அதிகாரிகளும் வழக்கு பதிந்துள்ளனர். சென்னையில் உள்ள ஜாபர் சாதிக், அமீர், இர்பான் புஹாரி உள்ளிட்டோரின் வீடு, அலுவலகம் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முன்தினம், காலை, 7:00 மணியில் இருந்து சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.இதற்கிடையே, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இரண்டாம் கட்ட விசாரணைக்கு அமீருக்கு, சம்மன் அனுப்பி உள்ளனர்.

சம்மன்

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, மதுரை தமுக்கம் மைதானத்தில் சிறப்பு தொழுகை நேற்று நடந்தது. இதில் பங்கேற்றபின், அமீர் கூறியதாவது:என் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள், இரவு 12:00 மணி வரை சோதனை நடத்தி, ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். அது என்ன ஆவணங்கள் என்பதை, நான் சொல்வது பொருத்தமாக இருக்காது; அதிகாரிகளே தெரிவிப்பர்.மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இரண்டாவது முறையாக ஆஜராக சொல்லி, சம்மன் அனுப்பி இருக்கின்றனர்.என்னை பொறுத்தவரை, இது ஒரு புது அனுபவம்தான். என்னோடு பயணித்த நபர் ஒருவர் மீது, இவ்வளவு பெரிய குற்றப்பின்னணி இருக்கும்போது, அந்த குற்றத்திற்கான சந்தேக நிழல் என் மீதும் விழுவதில் தவறில்லை.என் மீது சந்தேகமே படக்கூடாது என, நான் கூற முடியாது.என்னோடு பழகிய நபர் மீது குற்றப்பின்னணி இருப்பதால், என்னிடம் கேள்வி கேட்பதில் நியாயம் இருக்கிறது.அதேசமயம், என்னை மட்டுமே மையமாக வைத்து விசாரணை நடத்துவதில், சில சிக்கல்கள் இருக்கின்றன. நான் திறந்த மனதுடன் விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். எனக்கும், கைதாகி உள்ள ஜாபர் சாதிக்கிற்கும் ஏற்பட்ட தொடர்பு குறித்து ஏற்கனவே, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன்.

இக்கட்டான சூழல்

என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள, கொஞ்சம் கால அவகாசம் தேவை. விசாரணை முடிந்தபின், என் பங்களிப்பு என்ன என்பது குறித்து தெளிவாக மக்கள் மத்தியில் விளக்குவேன். ஓடி ஒளிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை; அதற்கான தேவையும் இல்லை. அதே நேரத்தில், 'யு டியூப்' உள்ளிட்ட சமூக வலைதளத்தில், என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை, சிரித்து தான் கடக்க வேண்டி உள்ளது. இறைவன் மிகப்பெரியவன் என்ற நம்பிக்கையை மட்டுமே நம்பி, இந்த இக்கட்டான சூழலை எதிர்கொண்டு வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி