உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணியா? * மதுரையில் பிரேமலதா அளித்த பதில்

நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணியா? * மதுரையில் பிரேமலதா அளித்த பதில்

மதுரை:நடிகர் விஜய் கட்சியின் கொள்கைகளை அறிவித்த பின் தான் அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து யோசிக்கவே முடியும் என தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.மதுரையில் அவர் அளித்த பேட்டி: முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதாக கூறி அமெரிக்கா சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்று சைக்கிள் ஓட்டுகிறார், பாடுகிறார், சிலை முன் போட்டோ எடுத்து மகிழ்கிறார். அவர் எவ்வளவு முதலீடுகளை ஈர்க்கிறார் என்பதை பார்ப்போம். ஏற்கனவே வெளிநாடுகளுக்கு சென்று எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. எத்தனை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. முதலீடுகளை ஈர்க்கின்றேன் என்று சொல்லி அவர் அமெரிக்கா செல்வதற்கு பதில், தமிழகத்தில் நடக்கும் ஊழல்களை சரி செய்திருந்தாலே நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்வதாகவே எடுத்துக் கொண்டிருக்கலாம். ஒரே இரவில் ரூ.5000 கோடி செலவு செய்து கார் பந்தயம் நடத்தி உள்ளனர். அதனால், யாருக்கு என்ன பயன்? அந்த பணத்தை வைத்து, தமிழகம் முழுவதும் நல்ல தரமான ரோடுகளை அமைத்திருக்கலாம். சினிமா துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் இருக்கின்றன. 'பசுத்தோல் போர்த்திய புலிகள்' போல் சில பெரிய மனிதர்கள் கீழ்த்தரமான வேலைகளை செய்கின்றனர். பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். பெண்கள் மீது அத்துமீறலில் ஈடுபடுவோருக்கு துாக்கு தண்டனை அளிப்பதில் தவறில்லை. சில ஆண்களின் தவறான செயல்களால், ஒட்டுமொத்த ஆண்களுக்கும் தலைகுனிவாக உள்ளது.நடிகர் விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி அளிக்காமல் அரசுத் தரப்பில் இழுக்கின்றனர். கார் பந்தயம் நடத்த ஒரே இரவில் நீதிமன்ற அனுமதியை அரசு பெறுகிறது. ஆனால், ஜனநாயக ரீதியில் கட்சித் துவங்கி மாநாடு நடத்தினால், அதற்கு அனுமதி அளிக்காமல் கேள்வி கேள்வி மேல் மேல் கேட்டு காலம் கடத்துகின்றனர். இப்படியெல்லாம் செய்து ஒருவர் வளர்ச்சியை மற்றவர் தடுத்துவிட முடியாது. விஜய் மாநாடு நடத்தி கொள்கைகள், கோட்பாடுகளை அறிவிக்கப்பட்டும். அதன் பின் தான், அவரோடு கூட்டணி வைக்க முடியுமா என்பது குறித்து யோசிக்கவே முடியும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை