4 ஆண்டாக செயல்படாத ஆதிதிராவிடர் நலக்குழு
மதுரை:தமிழகத்தில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலனுக்கான, ஆதிதிராவிடர் நலக்குழு நான்கு ஆண்டுகளாக செயல்படாமல் முடங்கி இருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இச்சமூக மக்களை கல்வியறிவு, சமூக பொருளாதார நிலைகளில் உயர்த்தி, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதமாக, 1988ல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உருவாக்கப்பட்டது. கோடிக்கணக்கான நிதி
ஆண்டுதோறும் இத்துறை வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான நிதி, முறையாக பயன்படுத்தப்படாமல் மீண்டும் திருப்பி அனுப்பப்படுவது தொடர்ந்தது. மேலும், பிற துறைகளின் வளர்ச்சிக்காக, அந்த நிதி பயன்படுத்தப்பட்டது. இதை தவிர்க்க, 1995ல் இச்சமூக மக்களுக்கான திட்டங்களை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தலைமையில், ஆதிதிராவிடர் நலக்குழு அமைக்கப்பட்டது.கடந்த 2017ல் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அமைச்சர் தலைவராகவும், துறை செயலர் துணை தலைவராகவும், இயக்குநர், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 34 பேர் உறுப்பினர்களாகவும் இருந்தனர். இக்குழு, 2017 ஏப்ரல் முதல், 2020 மார்ச் வரை செயல்பட்டது. அதன்பின் குழு காலாவதியான நிலையில், இதுவரை புதிய உறுப்பினர்கள்நியமிக்கப்படவில்லை. சந்தேகம்
இதுகுறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரங்களை பெற்றுள்ள மதுரை சமூக ஆர்வலர் கார்த்திக் கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி, பயன்பாடுகள் முறையாக மக்களிடம் சென்றடைந்ததா என்ற சந்தேகம் எழுந்தது. அதன் அடிப்படையில், கேள்விகள் எழுப்பி பதில்களை பெற்றுள்ளேன். நான்கு ஆண்டுகளாக குழு செயல்படாமல் முடங்கி இருப்பது தெரியவந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக குழுவை சீரமைப்பதோடு, போதுமான நிதி ஒதுக்கீடு செய்து முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.