UPDATED : ஜூன் 02, 2024 04:04 AM | ADDED : ஜூன் 02, 2024 01:08 AM
சென்னை:அக்னிவீர் வாயு வெற்றி அணிவகுப்பு விழா தாம்பரம் விமானப்படை நிலையத்தில் நடந்தது.இளைஞர்களிடையே தேசப்பற்றை அதிகரிக்கும் ஒரு பகுதியாக, 'அக்னிவீர் வாயு' திட்டம், 2022 முதல் செயல்படுத்தப்படுகிறது. விமானப்படை தளத்தை நிர்வகிப்பது, பாதுகாப்பது, போர் சமயங்களில் வீரர்களுக்கு பின்புலமாக இருந்து சூழலை கையாள்வது என, பலவகைகளில் அக்னிவீர்வாயு வீரர்கள் செயல்படுகின்றனர்.இதற்கான முன்றாவது பேட்ச் அக்னிவாயு வீரர்கள் தேர்ந்தெடுப்பது கடந்தாண்டு டிசம்பரில் நடந்து முடிந்தது. இதில், 234 பெண்கள் உட்பட 1,983 பேர் தேர்ச்சிப்பெற்றனர். இவர்களுக்கு ஜனவரி 1 முதல் நேற்று வரை, இரண்டு கட்டங்களாக பல வகைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதையடுத்து நேற்று தாம்பரம் விமானப்படை நிலையத்தில் அக்னிவீர்வாயு வெற்றி அணிவகுப்பு விழா நடந்தது. கண்களை கட்டிக் கொண்டு துப்பாக்கியை கையாள்வது, ஆயுதங்கள் கையாள்வது, யோகா, உடற்பயிற்சி, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல சாகசங்களை அக்னிவீர்வாயு வீரர்கள் நிகழ்த்தி காட்டினர். பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு ஏர் வைஸ் மார்ஷல் அமன் கபூர் பதக்கங்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்ட வீரர் ஹர்ஸ் குமாருக்கு ஆல் ரவுன்டர் விருது வழங்கப்பட்டது. மூன்றாம் கட்ட சிறப்பு பயிற்சிக்கு ஆவடி விமானப்படை நிலையம், ஜலஹள்ளி விமானப்படை நிலையம் என, பல இடங்களுக்கு இவர்கள் பிரித்து, அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.