சென்னை:அறுபது நாட்களில், 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் அதன் ஊழியர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.சென்னை விமான நிலையத்தில் கடைகள் நடத்த, வித்வேதா பி.ஆர்.ஜி., என்ற நிறுவனம், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம் உரிமம் பெற்றுள்ளது. அந்தக்கடை ஊழியர்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து அடையாள அட்டைகளையும் பெற்றுத் தந்துள்ளது. சர்வதேச முனையத்தில், 'ஏர் ஹப்' என்ற பரிசுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஊழியர்கள், அடையாள அட்டையை பயன்படுத்தி, 60 நாட்களில், 167 கோடி ரூபாய் மதிப்புள்ள, 267 கிலோ தங்கத்தை விமான நிலையத்திற்கு வெளியே கடத்தி உள்ளனர்.இது தொடர்பாக, 'யு டியூபர்' முகம்மது சபீர் அலி உட்பட ஒன்பது பேர், சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு உள்ளனர். தங்கம் கடத்தல் விவகாரத்தில், பா.ஜ., நிர்வாகி பிரித்வி என்பவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:வித்வேதா பி.ஆர்.ஜி., நிறுவனம், சென்னை விமான நிலையத்தில், 93 கடைகளை நடத்த, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம் உரிமம் பெற்றுள்ளது. உள்நாட்டு முனையத்தில், 48 கடைகளை நடத்துகிறது. அதில், வாடகை பாக்கி உள்ளிட்ட காரணங்களுக்காக, நான்கு கடைகள் மூடப்பட்டு காலியாக உள்ளன.சர்வதேச முனையம் இரண்டில், 26 கடைகளை நடத்துகிறது. அதில், 'ஏர் ஹப்' எனப்படும் பரிசுப் பொருட்கள், பொம்மை விற்பனை கடை ஊழியர்கள் தான் தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ளனர். இதனால், சுங்கத்துறை அதிகாரிகள் அந்த கடைக்கு, 'சீல்' வைத்துள்ளனர். மற்றொரு கடை பொருட்கள் இல்லாமல் காலியாக உள்ளது.முனையம் நான்கில், 19 கடைகளை நடத்தி வருகிறது. இந்த கடைகள் அனைத்தையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளோம். கடை ஊழியர்களுக்கு, வித்வேதா பி.ஆர்.ஜி., நிறுவனம், விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து, 2026 டிசம்பர் வரை, 121 நிரந்தர அடையாள அட்டையை பெற்றுத்தந்துள்ளது. இந்தாண்டு, ஆக.,3ம் தேதி வரை, மாதந்தோறும் புதுப்பிக்க வேண்டிய, 395 தற்காலிக அடையாள அட்டையையும் பெற்றுத்தந்துள்ளது. மேலும், 65 ஊழியர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்க வேண்டும் என, விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு விண்ணப்பித்து உள்ளது. அமைச்சகம் ஒப்புதல் அளித்த பின், விமான நிலையம் வாயிலாக அடையாள அட்டை வழங்கப்படும்.தற்போது, அந்த நிறுவனத்தின் கடை ஊழியர்கள், தங்கம் கடத்தல் விவகாரத்தில் சிக்கி உள்ளதால், ஏற்கனவே அடையாள அட்டைகள் பெற்ற ஊழியர்களின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.கடுமையான சோதனைக்குப் பின், விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். தங்கம் கடத்தல் தொடர்பாக, மேலும், சில கடை ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலில் உண்மை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.