உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொன்மை சிறப்புகள் நிறைந்த தோரணமலை

தொன்மை சிறப்புகள் நிறைந்த தோரணமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அகத்தியர் சித்த வைத்தியசாலை நடத்திய தலமாகவும், நுாற்றுக்கணக்கான சித்தர்கள் சித்த வைத்தியம் கற்ற இடமாகவும், உலகின் முதல் கபால அறுவை சிகிச்சை நடந்த களமாகவும் கூறப்படும் தோரணமலை முருகன் கோவிலில், ஆன்மிக பணிகள் மட்டுமின்றி, பல அறப்பணிகளும் நடந்து வருகின்றன. குறிப்பாக, சுற்றுவட்டார பகுதி மாணவர்கள், போட்டி தேர்வுக்கு தயாராகும் இடமாகவும், இளைஞர்கள் போலீஸ், ராணுவம் என, சீருடை பணிக்கு தயாராகும் பகுதியாகவும் மாறி வருவது, பலரது பாராட்டையும் பெற்று உள்ளது.

தேரையர் சித்தர்

தென்திசையை சமப்படுத்திட ஈஸ்வரனால் அனுப்பப்பட்ட அகத்திய மாமுனி, பொதிகை மலை வந்து தன் பணியை முடித்து திரும்பச் செல்லும் போது, தோரணமலையின் அழகையும், இங்குள்ள மூலிகைகளையும் பார்த்து வியந்து, இங்கேயே சில காலம் தங்கிவிட்டார். அப்படி தங்கியிருந்த போது, பலவித மூலிகை மருந்துகளை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்ததுடன், இங்கு சித்த மடம் ஒன்றையும் கட்டி, பல சித்தர்களையும் உருவாக்கியதாக கூறப்படுகிறது. தீராத தலைவலியால் அவதிப்பட்ட காசிவர்மன் என்ற மன்னனின் தலைவலியை நீக்க, கபாலத்தை திறந்து அறுவை சிகிச்சையும் செய்தார். அந்த சிகிச்சையின் போது உடனிருந்து சிறப்பாக உதவிய சீடரான தேரையர் சித்தரிடம், பொறுப்புகளை ஒப்படைத்த பின், அகத்தியர் தன் இருப்பிடம் திரும்பினார். தேரையர் சித்தர் தன் சித்த வைத்தியத்தால், இந்தப் பகுதி மக்களின் அன்பை பெற்று நீண்ட காலம் வாழ்ந்து, ஜீவ சமாதி அடைந்தார். அகத்தியரும், தேரையரும் தோரணமலையின் மீதுள்ள குகையில் வேலோடு கூடிய முருகனை வணங்கி வந்தனர். கால ஓட்டத்தில் எல்லாம் மங்கிவிட்டது.கடந்த 1930ல், இந்த மலைக்கு பக்கத்தில் உள்ள முத்துமாலைபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவரது கனவில் தோன்றிய முருகன், தான் மலையில் உள்ள சுனையில் இருப்பதாகவும், எடுத்து வழிபடுமாறும் கூறியுள்ளார்.

பவுர்ணமி கிரிவலம்

இதையடுத்து கிராமத்து மக்களுடன் தோரண மலை உச்சிக்கு சென்று, அங்குள்ள சுனையில் தேடிப்பார்த்த போது கனவில் வந்த முருகன் இருப்பதை கண்டு மெய்சிலிர்த்தனர்; முருகனை எடுத்து சீராட்டி அங்கிருந்த குகைக்குள் வைத்து வழிபாடு செய்தனர்.தோரணமலை முருகனை பார்க்க செல்லும் மலைப்பாதை, ஆரம்பத்தில் கரடுமுரடாக இருந்துள்ளது. அதன்பின், முருகனை வழிபட்டு பலன் பெற்ற பக்தர்கள் பலர், தந்த நன்கொடையால் இன்று எளிதில் மலைக்கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகளும், நடுநடுவே ஓய்வெடுக்க மண்டபமும் உள்ளன. தோரணமலை மீது ஏற முடியாதவர்களுக்காக, மலை அடிவாரத்திலேயே ஒரு முருகன் சன்னிதியும் உள்ளது. பவுர்ணமி நாட்களில், பக்தர்கள் தோரண மலையைச் சுற்றி கிரிவலம் வருகின்றனர். தைப்பூசம், வைகாசி விசாகம், மாதத்தின் கடைசி வெள்ளி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தோரணமலை முருகன் கோவில் நிர்வாக பொறுப்பை தற்போது கவனித்து வரும், செண்பகராமன் கூறியதாவது: தோரணமலை முருகனை தரிசிக்க, தற்போது பல்வேறு வெளியூர், வெளிநாட்டு பக்தர்களும் வருகின்றனர்; அப்படி வந்து பலன் பெற்றவர்கள் தாங்களாகவே முன்வந்து, கோவில் வளர்ச்சி திட்டங்களுக்கு உதவி வருகின்றனர். இதன் காரணமாக, ஆன்மிக பணியோடு பல்வேறு அறப்பணிகளும் செய்து வருகிறோம். மிகப்பெரிய நுாலகம் அமைத்துள்ளோம், போட்டித் தேர்வுக்கு தயராகும் மாணவர்களுக்கு, இங்குள்ள புத்தகங்கள் பெரிதும் பயன்படுகின்றன; பயிற்சியும் வழங்குகிறோம். இளைஞர்கள் சீருடை பணியில் சேர்வதற்கு வேண்டிய களப்பயிற்சி வழங்குவதுடன், அவர்களுக்கு தேவையான உணவும் வழங்குகிறோம்; அனைத்தும் இலவசம்.இந்தக் கோவிலில் திருமணம் நடைபெறுவது, மிகவும் விசேஷம் என்பதால், சுற்றுவட்டாரத்தில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு ஊர்களில் இருந்தும் இங்கு வந்து நிறைய பேர் திருமணம் செய்து கொள்கின்றனர். இவ்வாறு செண்பகராமன் கூறினார்.பெயர் வரகாரணம் என்ன? தோரணமலை என்பது, துாரத்தில் இருந்து பார்க்கும் போது, ஒரு யானை கம்பீரமாக அமர்ந்து இருப்பது போல தோன்றும். யானைக்கு வாரணம் என்ற பெயரும் உண்டு. இதன் காரணமாக வாரணமலையாக இருந்து மருவி, இப்போது தோரணமலையாகி இருக்கலாம் என்பது ஒரு கருத்து. இந்த மலைக்கு தென்புறம் ராமா நதியும், வடக்கு பக்கம் ஜம்பு நதியும் தோரணம் போல சுற்றி ஓடுவதால், தோரணமலை என்ற பெயர் வந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

எப்படி செல்வது?

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இருந்து கடையத்திற்கு செல்லும் பாதையில், 15 கி.மீ., துாரம் பயணித்தால், தோரணமலை கோவில் வரவேற்பு வளைவு அனைவரையும் வரவேற்கிறது. இங்கிருந்து தோரணமலையின் அடிவாரத்திற்கு சென்று விடலாம். ஆயிரம் படிக்கட்டுகளில் ஏறி அகத்தியரும், தேரையரும் வழிபட்ட முருகனை தரிசிக்கலாம்; வற்றாத சுனைகள் பல உள்ளன. படி ஏற முடியாதவர்கள் கீழே உள்ள பாலமுருகன் உள்ளிட்ட சன்னதிகளை வழிபட்டு அருள் பெறலாம்.பல்வேறு சித்தர்கள் வழிபட்ட தலம் என்பதால், தோரணமலை முருகனை வணங்கினால், சந்தோஷத்தை தவிர பிற எந்த தோஷமும் நெருங்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடன் வாய்ப்பிருந்தால், நீங்களும் ஒரு நடைபோய்விட்டு வரலாம்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

G V Sucilan
ஜூலை 03, 2024 17:01

தோரணை மலை முருகன் அருளால் உங்கள் குடும்பம் நலமோடு இருக்கட்டும்..


kantharvan
ஜூலை 02, 2024 16:21

அட இது சொந்த ஊரு உருட்டு .


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை