அண்ணாமலை எழுதிய உங்களில் ஒருவன் கட்டுரை தொகுப்பு நுால் வெளியீடு
சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்' என்ற பெயரில், தமிழகம் முழுதும் பாதயாத்திரை மேற்கொண்டார். அது தொடர்பாக, அண்ணாமலை எழுதிய கட்டுரை, 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து வெளியானது. இதன் தொகுப்பை, 'தாமரை பிரதர்ஸ் மீடியா பி.லிட்.,' நிறுவனம், 'உங்களில் ஒருவன்' நுாலாக பதிப்பித்துள்ளது.இதன் வெளியீட்டு விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள, 'தினமலர்' நாளிதழ் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நுாலை, 'தினமலர்' நாளிதழ் வெளியீட்டாளர் முனைவர் எல்.ராமசுப்பு வெளியிட, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் 'தினமலர்' நாளிதழ் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பாதயாத்திரை
நுாலை பெற்ற அண்ணாமலை பேசியதாவது:என்னை போன்ற சாமானிய அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பளிப்பதில், 'தினமலர்' நாளிதழ் பெரும் பங்காற்றுகிறது. நம் தேசிய சித்தாந்தத்தை விதைப்பதற்காக, நான் கடந்த தேர்தலின் போது, 100 தொகுதிகளை தேர்வு செய்து, 'என் மண்; என் மக்கள்' என்ற முழக்கத்துடன் பாதயாத்திரை சென்றேன். அது குறித்த கட்டுரைகளை நான் எழுத, அவற்றை, 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து வெளியிட்டது. இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இதற்கு உறுதுணையாக இருந்தார். அவர் உள்ளிட்டோரின் தொடர் ஒத்துழைப்பால் தான் அது சாத்தியமானது.ஆனால், 'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, 'நாங்கள் பத்திரிகையாளராக, அனைத்து கட்சியினருக்கும் வாய்ப்பளித்தோம். அந்த வகையில் தான் உங்களுக்கும் வாய்ப்பளித்தோம். 'அதில் இடம்பெற்ற முக்கிய கட்டுரைகளை தொகுத்து நுாலாக வெளியிட்டு, ஆவணப்படுத்துவது எங்கள் கடமை' என, என்னிடம் கூறினார். வெளியீடு தாமதமாகிறதே என்ற வருத்தம் இருந்தது. ஆனால், நுாலின் தரம் பார்த்த பின், வருத்தம் இல்லை. இந்த நுாலை மத்திய அமைச்சர் வெளியிட வேண்டும் என கட்சியினர் கூறினர். அதற்காக பெரிய மண்டபமும் தயாரானது. ஆனால், இந்த நுாலின் தலைப்பு, 'உங்களில் ஒருவன்' என்பதால், எனக்கு ஒரு சிறு நெருடல் இருந்தது.அதாவது, பா.ஜ., சித்தாந்தப்படியும், என் உள்ளுணர்வின் படியும், ஒரு தனி நபரை முன்னிலைப்படுத்தி, இன்னொருவர் வெளியிடுவது நல்லதல்ல என்பதற்காக, அதை தவிர்த்தேன். பதிப்பக முடிவு
ஆனாலும், இரு மத்திய அமைச்சர்கள் வெளியிட தயாராக இருந்தனர். அதனால், எனக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது.இந்த புத்தகத்தில் என் முகம் உள்ளது. அது, பதிப்பகத்தின் முடிவு. அதில், நான் தலையிட முடியாது. நுாலில் என் முகம் இருந்தாலும், தமிழகத்தின் சாமானிய குடும்ப சகோதர - சகோதரிகளின் முகமாகத்தான் நான் பார்க்கிறேன். தகவல் சேகரிப்பு
இதில் உள்ள கட்டுரைகள், தமிழகத்திற்கான மாற்றம் குறித்தும், விவசாயம், கல்வி, சட்டம் - ஒழுங்கு, லஞ்சம், ஊழல் என பல விஷயங்களை, நிறைய தரவுகளுடன் பேசுகின்றன. அவை, பா.ஜ., தொண்டர்களுக்கும், தமிழகம் சார்ந்த தரவுகளை சேகரிப்போருக்கும் பெரிதும் உதவும்.நான் பாதயாத்திரை சென்றபோது, தினமும் கட்டுரைகள் வழங்க வேண்டிய பணிகளை, தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதனின் மகள் வழி பேரனான ஸ்ரீகாந்த் ஏற்றார். தந்தை இறந்த நாளில் கூட, இப்பணியை ஸ்ரீகாந்த் செம்மையாக செய்தார்.கடந்த லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 18.5 சதவீத ஓட்டுகளையும், பா.ஜ., 13.5 சதவீத ஓட்டுகளையும் தமிழகத்தில் பெற்றதற்கான காரணங்களில் இந்த கட்டுரைகளும் ஒன்று. தேசியம், தெய்வீகம் என்ற சித்தாந்தமுள்ள 'தினமலர்' நாளிதழ், மிகவும் நடுநிலைமையோடு, தி.மு.க., -- அ.தி.மு.க., -- பா.ஜ., மட்டுமின்றி, புதிதாக கட்சி துவங்கி உள்ள விஜய் உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் சமமாகக் கருதி, அவற்றின் செய்திகளை வெளியிட்டு, மக்களிடம் சேர்த்து, அவர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. அப்படிப்பட்ட நாளிதழில், என் முதல் கட்டுரை தொடரை எழுதியதும், 'தாமரை பிரதர்ஸ் மீடியா' சார்பில், தமிழில் முதல் நுால் வெளிவருவதும் எனக்கு பெருமை. இதை சாத்தியமாக்கிய உங்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், 'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, இணை இயக்குனர்கள் ஆ.லட்சுமிபதி, ஆர்.சீனிவாசன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் தனிச்செயலர் ஸ்ரீகாந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.