உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் தாக்கலாகும் ஜாமின் மனுக்களை வேறு நீதிபதி விசாரிக்கலாம்: ஐகோர்ட்

மீண்டும் தாக்கலாகும் ஜாமின் மனுக்களை வேறு நீதிபதி விசாரிக்கலாம்: ஐகோர்ட்

சென்னை: 'ஜாமின், முன்ஜாமின் மனுக்களை விசாரிக்க, ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டு இருக்கும் போது, ஏற்கனவே விசாரித்து தள்ளுபடி செய்த நீதிபதி தான் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்பது தேவையில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவையை சேர்ந்த பாபு, திருட்டு வழக்கில் கைதானார். ஜாமின் கேட்டு, அவர் தாக்கல் செய்த மனு, நீதிபதி சுந்தர்மோகன் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஏற்கனவே பாபு தாக்கல் செய்த ஜாமின் மனுவை, வேறு ஒரு நீதிபதி தள்ளுபடி செய்துள்ளதால், அதே நீதிபதி தான், இந்த முறையும் ஜாமின் மனுவை விசாரிக்க வேண்டுமா அல்லது உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவின்படி, ஜாமின், முன்ஜாமின் மனுக்களை விசாரிக்கும் நீதிபதி விசாரிக்கலாமா என்பதை தெளிவுபடுத்தும்படி, தலைமை நீதிபதிக்கு நீதிபதி சுந்தர்மோகன் பரிந்துரை செய்தார்.இதுகுறித்து விசாரிக்க, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோருக்கு தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.அவர்கள் முன், இந்த மனு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில், மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா ஆஜரானார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் பாலசந்திரன், முகமது ரியாஸ் ஆகியோரும், தலைமை குற்றவியல் வழக்கறிஞரின் வாதத்தை ஏற்பதாக தெரிவித்தனர்.இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ஜாமின், முன்ஜாமின் மனுக்களை விசாரிக்க, ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டு இருக்கும் போது, ஏற்கனவே விசாரித்த நீதிபதிதான் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்பது தேவையில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, இந்த வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நீதிபதியே விசாரிக்கலாம். அதேநேரம், ஏற்கனவே தள்ளுபடி செய்த நீதிபதி தெரிவித்துள்ள கருத்துக்களை, மீண்டும் ஜாமின், முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்யப்படும் மனுக்களில், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அந்த நீதிபதியின் கருத்தை முறையாக பரிசீலித்து, தகுந்த உத்தரவை நீதிபதி பிறப்பிக்க வேண்டும்.தற்போது ஜாமின், முன்ஜாமின் மனுக்களை, நீதிபதி சுந்தர் மோகன் விசாரித்து வருகிறார். எனவே, ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு, மீண்டும் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் அனைத்தையும், நீதிபதி சுந்தர்மோகன் முன் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை