தொல்லியல் அறிஞர் மா.சந்திரமூர்த்தி மறைவு
சென்னை:தமிழக தொல்லியல் துறை முன்னாள் இணை இயக்குநரும், தொல்லியல் அறிஞருமான மா.சந்திரமூர்த்தி, 80, காலமானார்.நாகப்பட்டினம் மாவட்டம், நெய்தவாசலில், 1945, ஜூன் 19ல் பிறந்தவர் மா.சந்திரமூர்த்தி. சென்னை பல்கலையில், தொல்லியல் படிப்பை முடித்து, 1971ல் தொல்லியல் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். கொற்கை, கரூர், மாங்குடி, கங்கைகொண்ட சோழபுரம், கோவலன் பொட்டல் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வுகளை செய்தார். சிதம்பரம், தஞ்சாவூர் உள்ளிட்ட முக்கிய கோவில்களின் கட்டடக்கலை, சிற்பக்கலை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அமைந்துள்ள சிலைகளின் தனித்துவங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தினார். நுாற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும், 'தமிழ்நாட்டு சிவாலயங்கள், எசாலம் வரலாற்று புதையல், பூம்புகார், குந்தவையின் கலைக்கோவில்கள், பண்டைத் தடயம், நகரத்தார் மரபும் பண்பாடும்' உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஆய்வு நுால்களை எழுதியுள்ளார். இவரின் பல நுால்கள், தமிழக அரசின் சிறந்த நுால் பரிசை பெற்றவை. தமிழக தொல்லியல் துறையில், 33 ஆண்டுகள் பணியாற்றி, துறையின் இணை இயக்குநராக, கடந்த 2004ல் பணி ஓய்வு பெற்றார். சென்னை போரூரில் உள்ள, அவரது வீட்டில், நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் காலமானார். இவரது இறுதிச் சடங்குகள், நடந்தன. மறைந்த சந்திரமூர்த்திக்கு, லட்சுமி என்ற மனைவி, திலகவதி என்ற மகள், சுந்தரபாண்டியன், விஷ்ணுவர்தன் என இரு மகன்கள் உள்ளனர்.