| ADDED : செப் 04, 2024 01:47 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : தமிழக அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு ஆவணங்கள் மறு விசாரணைக்காக சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.2006 --2011 தி.மு.க., ஆட்சியில் அப்போதைய கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு வருமானத்துக்கு அதிகமாக ரூ. 76 லட்சத்து 40 ஆயிரத்திற்கு சொத்து குவித்ததாகவும், பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இருந்த சாத்தூர் ராமச்சந்திரன் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 44 லட்சம் அளவிற்கு சொத்து குவித்ததாகவும் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் 2012ல் வழக்கு பதிவு செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் 2022 டிசம்பரில் தங்கம் தென்னரசுவையும், 2023 ஜூலையில் சாத்துார் ராமச்சந்திரனையும் வழக்கிலிருந்து விடுவித்தது.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரித்து, அமைச்சர்கள் இருவரின் விடுதலையும் செல்லாது எனவும், மீண்டும் இரு வழக்குகளும் ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முதலில் இருந்து விசாரிக்க வேண்டுமெனவும், இதன் விசாரணைக்காக செப்., 9ல் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரனும், செப்.,11ல் அமைச்சர் தங்கம் தென்னரசும் ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும், இவ்விரு வழக்குகளையும் தினமும் விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அமைச்சர்கள் இருவரின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்நிலையில் வழக்கு விசாரணை துவங்க இன்னும் சில நாட்களே இருப்பதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து, அமைச்சர்கள் இருவர் மீதான வழக்கு ஆவணங்கள் நேற்று ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.