உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலை இல்லாத நேரத்தில் அதிகார பதவி டில்லி சென்று யு டர்ன் அடித்த பா.ஜ., நிர்வாகிகள்

அண்ணாமலை இல்லாத நேரத்தில் அதிகார பதவி டில்லி சென்று யு டர்ன் அடித்த பா.ஜ., நிர்வாகிகள்

சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சர்வதேச அரசியல் பாடம் படிக்க, மூன்று மாத பயணமாக லண்டன் சென்றுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அதிருப்தியில் உள்ள தமிழக பா.ஜ., முக்கிய நிர்வாகிகள், கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்து, கவர்னர், மத்திய அரசின் வாரியங்கள், பொதுத்துறை நிறுவனங்களில், தங்களுக்கு தனி அதிகாரம் படைத்த இயக்குநர் பதவிகள் வழங்குமாறு கேட்டு வருகின்றனர். இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக பா.ஜ.,வில் உள்ள பலர், டில்லி மேலிடத்துடன் நெருக்கமாக உள்ளனர். அவர்கள், மாநில தலைமைக்கு தெரியாமல், மேலிட தலைவர்கள் உதவியால், கவர்னர், பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குனர் உள்ளிட்ட பதவிகளை பெற்று வந்தனர்.லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்காமல், பா.ஜ., தலைமையில் தனி கூட்டணி அமைந்தது. இதற்கு, அண்ணாமலையின் செயல்பாடே முக்கிய காரணம். அவர், கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் மட்டுமின்றி, பிரதமர் மோடி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள், பல மேலிட தலைவர்களுடன் நேரடி தொடர்பில் உள்ளார். இதனால், தமிழக பா.ஜ., நிர்வாகிகள், அண்ணாமலைக்கு தெரியாமல் டில்லி சென்று, மேலிட தலைவர்களை சந்திப்பதை தவிர்த்தனர். கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காமலும், லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காமலும், கொங்கு மண்டலம், தென் மற்றும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பலர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களிடம், தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வந்த அமித் ஷா, நட்டா ஆகியோர், 'மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் ஆனதும், உங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும்; கட்சி அறிவித்த வேட்பாளரின் தேர்தல் வெற்றிக்கு உதவுங்கள்' என்றனர்.மோடி மீண்டும் பிரதமராகி, இரு மாதங்களுக்கு மேலாகியும் தங்களுக்கு உரிய பதவி கிடைக்காததால், தமிழகத்தைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். இதை, சென்னையில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பேசிய, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., விஜயதாரணியின் பேச்சு உறுதி செய்தது. இந்நிலையில், இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையில், சர்வதேச அரசியல் புத்தாய்வு படிப்பிற்காக, அண்ணாமலை,ஆக., 28ல் லண்டன் சென்றார். படிப்பு முடித்து, அவர் தமிழகம் திரும்புவதற்கு மூன்று மாத காலம் ஆகும். தமிழகத்தில் அண்ணாமலை இல்லாத இந்த சூழலை வாய்ப்பாக பயன்படுத்தி, முக்கிய பதவிகளை எதிர்பார்க்கும் டெல்டா, கொங்கு, தென் மாவட்டங்களை சேர்ந்த தமிழக பா.ஜ.,வின் சில நிர்வாகிகள், டில்லி சென்று கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்து, மத்திய அரசின் வாரியங்களில் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தனி அதிகாரம்படைத்த இயக்குனர் உள்ளிட்ட பதவிகளில், தங்களை நியமிக்குமாறு கேட்டு வருகின்றனர். அவர்களை, அண்ணாமலை ஒப்புதலுதடன் வருமாறு, மேலிட தலைவர்கள் அறிவுறுத்தி உள்ளதால், போன வேகத்தில் யு டர்ன் அடித்து, விரக்தியுடன் தமிழகம் திரும்பி உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை