சென்னை: அரசு போக்குவரத்து கழக பஸ்களை, டீசலுக்கு பதிலாக சி.என்.ஜி., காஸ் பயன்படுத்தி இயக்குவதற்கான நடவடிக்கைகள் துவங்கி உள்ளன. முதல் கட்டமாக எட்டு பஸ்கள், சி.என்.ஜி.,க்கு மாற்றப்பட்டு, ஆகஸ்டில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.சென்னையில் பேட்டரி பஸ்களை இயக்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதேபோல, சி.என்.ஜி., எனப்படும் இயற்கை எரிவாயு வாயிலாக, அரசு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, சென்னை, விழுப்புரம், கும்பகோணம், மதுரை போக்குவரத்து கழகங்களில், தலா இரண்டு பஸ்களை தேர்வு செய்து, சி.என்.ஜி.,க்கு மாற்றும் பணிகள் துவங்கப்பட்டுஉள்ளன.இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழக செலவுகளை குறைப்பதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும், பேட்டரி மற்றும் சி.என்.ஜி., பஸ்களை இயக்க உள்ளோம். அடுத்த சில மாதங்களில், 450க்கும் மேற்பட்ட பேட்டரி பஸ்கள் பயன்பாட்டிற்கு வரும்.இதேபோல, சி.என்.ஜி., தொழில்நுட்பத்தில் பஸ்களை இயக்க, முதல் கட்டமாக எட்டு பஸ்களில் கட்ட மைப்பு பணிகள் நடந்து வருகின்றன; அடுத்த மாதம் இறுதியில் பணிகள் முடிவு அடையும். இதுதொடர்பாக, இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். வரும் ஆகஸ்ட்டில் சோதனை ஓட்டம் நடத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கிலோ சி.என்.ஜி., காஸ் 80 ரூபாய் என்பதால், அரசு போக்குவரத்து கழகங்களின் எரிபொருள் செலவு 20 சதவீதம் வரை குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.