உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,வில் அடுத்தடுத்து குவியும் புகார்கள் அதிரடி மாற்றம் குறித்து இன்று ஆலோசனை

பா.ஜ.,வில் அடுத்தடுத்து குவியும் புகார்கள் அதிரடி மாற்றம் குறித்து இன்று ஆலோசனை

சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில், முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. அதில், பெருங்கோட்டங்கள் கலைப்பு உட்பட கட்சி அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்., 19ல் நடந்தது. பா.ஜ., தலைமையிலான கூட்டணியில், 19 தொகுதிகளில் பா.ஜ.,வும்; மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் போட்டியிட்டன. கட்சி மேலிடம் சார்பில்,தேர்தல் பணியில் ஈடுபட்ட, 'பூத்' கமிட்டி நிர்வாகிகளுக்கு செலவு தொகை வழங்குவது உள்ளிட்ட ஒட்டு மொத்த தேர்தல் செலவுக்காக, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா, 15 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டது. பல தொகுதிகளில் முறையாக இந்தப் பணத்தை வழங்காமல், முக்கிய நிர்வாகிகள் பதுக்கி விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக, டில்லி பா.ஜ., மேலிடத்திற்கும், தமிழக தலைமைக்கும் தொண்டர்கள் புகார்களை அனுப்பி வருகின்றனர்.தமிழகத்தில் தேர்தல் முடிந்த உடனே, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா என, தொடர்ந்து பிற மாநிலங்களுக்கு தேர்தல் பிரசாரத்திற்கு சென்றார் அண்ணாமலை. அதனால், கட்சியினர் மீது எழுந்த புகார் தொடர்பான விசாரணையில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில், தேர்தலுக்கு பின் நடக்க உள்ள பா.ஜ., மாநில நிர்வாகிகளின் முதல் ஆலோசனை கூட்டம், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடக்கிறது. காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும் கூட்டத்தில், லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணி மற்றும் பிரிவுகளின் நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் புகாருக்கு ஆளானவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும், கட்சியின் அமைப்பில் மாற்றங்கள் செய்வது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.தமிழக பா.ஜ., அமைப்பு ரீதியாக, 66 மாவட்டங்களாக செயல்படுகிறது. ஏழு முதல், 11 மாவட்டங்களுக்கு ஒரு பெருங்கோட்டம் என, எட்டு பெருங்கோட்டங்கள் உள்ளன. மாவட்ட வாரியாக ஆய்வு செய்து கட்சி பணிகளை முடுக்கிவிட வேண்டிய பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என, கட்சி தலைமை கண்டறிந்துள்ளது. எனவே, அவர்களை மாற்றுவது மற்றும் மாநில நிர்வாகிகளின் எண்ணிக்கையை குறைப்பது உட்பட பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை