உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 267 கிலோ தங்கம் கடத்தலில் தொடர்பு? முக்கிய புள்ளியிடம் என்.ஐ.ஏ., விசாரணை

267 கிலோ தங்கம் கடத்தலில் தொடர்பு? முக்கிய புள்ளியிடம் என்.ஐ.ஏ., விசாரணை

சென்னை:வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு இரண்டு மாதங்களில், 267 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது தொடர்பாக, சர்வதேச கடத்தல்காரர் முனியாத் அலிகானிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.கடந்த, 2020ல், சவுதி அரேபியாவில் இருந்து மர்ம நபர்கள், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு, 9 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்கக்கட்டிகளை கடத்தி வந்தனர்.

பயங்கரவாத கும்பல்

அதன் பின்னணியில், சர்வதேச தங்கக் கடத்தல் கும்பல் தலைவன் முனியாத் அலிகான், கூட்டாளிகள் முகமது அலி, ஷோகத் அலி ஆகியோர் இருப்பதும், பயங்கரவாத கும்பல்களுடன் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது. இவர்களை, சி.பி.ஐ., மற்றும் தேசிய புலனாய்வு முகமை எனும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வந்தனர். 2021ல், முனியாத் அலிகான் மற்றும் கூட்டாளிகளை, தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து, 'ரெட்கார்னர்' நோட்டீஸ் வழங்கப்பட்டது.மூவரும், ஐக்கிய அரபு நாடுகளில் பதுங்கி இருப்பது, 'இன்டர்போல்' மற்றும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இணைந்து நடத்திய விசாரணையில் தெரியவந்தது. சில மாதங்களுக்கு முன், முகமது அலி, ஷோகத் அலி ஆகியோர் பிடிபட்டனர். இருவரும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

சர்வதேச தொடர்பு

தற்போது, முனியாத் அலிகான், 'இன்டர்போல்' போலீசாரால் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவரை ஜெய்ப்பூரில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணையில், முனியாத் அலிகான், சென்னை, டில்லி, மும்பை, திருவனந்தபுரம் என, பல விமான நிலையங்கள் வாயிலாக தங்கம் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.கடந்த 2 மாதங்களில், சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து, 197 கோடி ரூபாய் மதிப்புள்ள, 267 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது. இதில், சபீர் அலி என்ற 'யு டியூபர்' சுங்கத் துறை அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார். சபீர் அலிக்கும், முனியாத் அலிகான் கூட்டாளிகளுக்கும் தொடர்பு இருப்பது, விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவனந்தபுரம், மும்பை, டில்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் கடை நடத்த, சபீர் அலி அனுமதி கோரியுள்ளார். இதன் பின்னணியில் சர்வதேச தங்கக் கடத்தல் கும்பல் இருப்பதும் தெரியவந்துள்ளது. முனியாத் அலிகான் மற்றும் இவரின் 'நெட்ஒர்க்' குறித்து தொடர் விசாரணை நடப்பதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை