கிரீம் பன் விவகாரம்: பா.ஜ., மண்டல் தலைவர் நீக்கம்
கோவை:க்ரீம் பன் விவகாரம் சமந்தமாக பா.ஜ., மண்டல் தலைவர் நீக்கம் செய்யப்பட்டார்.கோவையில் கடந்த, 11ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொழில் முனைவோர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜி.எஸ்.டி., குறித்து நகைச்சுவை உணர்வுடன் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.,வை இணைத்து பேசினார்.மறுநாள் ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், தான் பேசியதற்கு மத்திய அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,வை சந்தித்து மன்னிப்பு கேட்டார். நிகழ்ச்சியில் பேசிய வீடியோவும், மன்னிப்பு கேட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஓட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்து அவமதிக்கப்பட்டதாக பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் பா.ஜ.,விலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது-. அன்னபூர்ணா ஓட்டல் விவகாரம் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாக சிங்காநல்லுார் மண்டல் தலைவர் சவுரிப்பாளையத்தை சேர்ந்த சதீஷ் என்பவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கி மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
விமர்சனத்தை ஏற்படுத்திய வீடியோவிற்கு மாநில தலைவர் அண்ணாமலை ஓட்டல் உரிமையாளர் சீனிவாசனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவை எடுத்தது யார், சமூக வலைதளங்களில் வெளியிட்டது யார் என்பது குறித்து கட்சியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் சிங்காநல்லுார் மண்டல் தலைவர் சதீஷ் பரப்பி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து கட்சி தலைமையில் இருந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு வந்தது. அதன்படி அவர் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.ரமேஷ்குமார், பா.ஜ., கோவை மாவட்டத்தலைவர்