சென்னை:நடப்பாண்டு ஊரகப் பகுதிகளில் 5,000 நீர் நிலைகளை, பொதுமக்கள் பங்களிப்புடன் புனரமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் பெரிய ஏரிகள், நீர்வள ஆதாரத்துறை பராமரிப்பிலும், சிறிய ஏரிகள் மற்றும் குளங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பிலும் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றில் பராமரிப்பு இல்லை. பல இடங்களில் கால்வாய்கள் துார்ந்து போனதால், நீர்நிலைகளுக்கு இடையிலான சங்கிலித் தொடர் அறுந்துபோய் உள்ளது. இதை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.எனவே, ஊரகப் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய சிறுபாசன ஏரிகள், குளங்கள் மற்றும் வரத்து கால்வாய்களை சீரமைத்து மேம்படுத்தி, இயற்கையை மீட்டெடுக்க தமிழக அரசு முடிவு செய்தது.இதன் ஒரு பகுதியாக, 'நடப்பாண்டு 500 கோடி ரூபாய் மதிப்பில், தலைசிறந்த அறிவியல் நிறுவனங்களின் வழிகாட்டு தலுடன், மக்களின் பங்களிப்போடு 5,000 நீர் நிலைகளை புனரமைக்கும் பெரும் திட்டம் செயல்படுத்தப்படும்' என, 2024 - 25ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த பணிகளை, ஊரக வளர்ச்சித்துறை துவக்கி உள்ளது.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
நீர்நிலைகளை துார் வாரி, கரைகளை பலப்படுத்த, நிதி ஒதுக்கி 'டெண்டர்' விட்டு பணி செய்தால், அந்த நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் ஏற்படுவதில்லை. பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால், பணியும் முறையாக நடப்பதில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண, பொதுமக்கள் பங்களிப்புடன், நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களை துார் வாரி சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் நிதி போன்றவற்றை பயன்படுத்தி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன், நீர்நிலைகளை சீரமைக்கும் பணி செயல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக, 10 நாட்களுக்கு முன், தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப் பட்டது. விவசாய சங்க பிரதிநிதிகளுடனும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.நீர்நிலைகளை சீரமைக்க தேவையான திட்ட மதிப்பீட்டில், 5 முதல் 10 சதவீத தொகை, சம்பந்தப்பட்ட கிராம மக்களிடம் பெறப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள், ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின் வெளியிடப்படும். பொதுமக்கள் பங்களிப்புடன் 5,000 நீர்நிலைகளை சீரமைத்து, ஒன்றோடு ஒன்று இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.