உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் கோப்பையில் கால்பந்து போட்டி நீக்கம் அரசு ஊழியர்கள் அதிருப்தி

முதல்வர் கோப்பையில் கால்பந்து போட்டி நீக்கம் அரசு ஊழியர்கள் அதிருப்தி

கோவை:பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியர், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என, அனைத்து தரப்பினரும் பங்கேற்று விளையாடும் வகையில், பல்வேறு பிரிவுகளில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், ஆண்டுதோறும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக நடத்தப்படுகின்றன.

அதிருப்தி

இந்த ஆண்டுக்கான போட்டி விபரங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டது. அதில், அரசு ஊழியர்களுக்கான பிரிவில், கபடி, தடகளம், இறகுப்பந்து, வாலிபால், செஸ், கேரம் ஆகிய போட்டிகள் நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாட்டுகள் இடம் பெறவில்லை.தமிழகத்தில் கால்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாட்டுகளில் ஆர்வமும், திறமையும் உள்ள அரசு ஊழியர்கள் பலர் உள்ளனர். முதல்வர் கோப்பை வரும் முன், அரசு ஊழியர்களுக்காக நடத்தப்பட்டு வந்த விளையாட்டுகள் தற்போது இல்லாததால், அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கோரிக்கை

அரசு ஊழியரும், கால்பந்து வீரருமான ஜேம்ஸ் கென்னடி கூறுகையில், ''அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் கால்பந்து விளையாட விரும்புகின்றனர். சில ஆண்டுகளாகவே கால்பந்து விளையாட்டை சேர்க்கும்படி கோரிக்கை விடுக்கிறோம். ''விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கண்டு கொள்வதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஏமாற்றம் தான் கிடைக்கிறது,'' என்றார்.தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'முதல்வர் கோப்பை போட்டிக்காக ஒதுக்கப்படும் நிதியில், அனைத்து விளையாட்டுகளையும் நடத்த முடியாது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பிரிவிலும், புதிது புதிதாக விளையாட்டுகளை சேர்க்கவும், நீக்கவும் முடிவு செய்துள்ளோம். அரசு ஊழியர்களின் கோரிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் நிறைவேறும்' என்றனர்.

25-க்குள் முன்பதிவு செய்யுங்க

கடந்தாண்டு, 50.89 கோடி ரூபாய் செலவில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்கு, 25 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இந்தாண்டு பரிசுத்தொகை, 37 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்தாண்டுக்கான போட்டியில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என, ஐந்து பிரிவுகளில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மாவட்ட, மண்டல, மாநில அளவிலான போட்டிகள், அடுத்த மாதம் துவங்கி அக்டோபரில் முடிவடையும்.இதில் பங்கேற்க விரும்புவோர், வரும் 25ம் தேதிக்குள், https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்து, உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.மாநில தனிநபர் போட்டியில் வெற்றியாளர்களுக்கு, முதல் பரிசாக, 1 லட்சம் ரூபாய்; இரண்டாம் பரிசாக, 75,000; மூன்றாம் பரிசாக, 50,000 ரூபாய்; குழு போட்டிகளில் வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக 75,000; இரண்டாம் பரிசாக 50,000; மூன்றாம் பரிசாக 25,000 ரூபாய் வழங்கப்படும். இந்தாண்டு முதல் நான்காம் பரிசும் வழங்கப்பட உள்ளது.மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை, 95140 00777 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ