பெண்களை பாதுகாப்பதில் தி.மு.க., அரசு படுதோல்வி
சென்னை:பெண்களை பாதுகாப்பதில், தி.மு.க., அரசு படுதோல்வி அடைந்து விட்டதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:கிருஷ்ணகிரியில் இளம்பெண் ஒருவர், கஞ்சா போதையில் இருந்த நான்கு மனித மிருகங்களால், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும், நுாற்றுக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. தமிழகத்தில் வெளியில் நடமாடுவதற்கே பெண்கள் அஞ்சும் நிலை தான் நிலவுகிறது. இதற்காக, தமிழக ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும். குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆட்சியாளர்களின் மறைமுக ஆதரவு கிடைப்பதும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தமிழக முழுதும் தட்டுப்பாடின்றி கிடைப்பதும்தான், பெண்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது. கஞ்சா போதையில் நடமாடுபவர்கள், எந்த நேரமும் வெடித்து, பேரழிவை ஏற்படுத்த காத்திருக்கும் வெடிகுண்டு போன்றவர்கள் என்பதை உணர்ந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்து, பெண்களை பாதுகாப்பதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது. தமிழக அரசு இனியாவது விழித்து கொண்டு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.