| ADDED : மே 10, 2024 04:23 AM
சென்னை : சென்னை - துபாய் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால், விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இயந்திர கோளாறை விமானி கண்டுபிடித்ததால், அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டு, 376 பயணியர் உயிர் தப்பினர்.சென்னை - துபாய், 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' நிறுவன விமானம், நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. அனைத்து சோதனைகளும் முடிந்து, 362 பயணியர் விமானத்தில் அமர்ந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓட தயாரானது. அதற்கு முன்னதாக விமானி சரிபார்த்த போது, இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அவர் உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.விமானத்தின் கதவுகளை திறந்து, பொறியாளர்கள் இயந்திரங்களை சரிபார்த்தனர். நள்ளிரவை கடந்தும் இயந்திர கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதனால், விமான பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.பயணியர் அனைவரும் பல்வேறு ஹோட்டல்களில் தங்க அனுப்பி வைக்கப்பட்டனர். சிலர், பயண தேதியை மாற்றி, வீடு திரும்பினர்.விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, 362 பயணியர், 14 ஊழியர்கள் உட்பட, 376 பேர் உயிர் தப்பினர்.