உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் ஆஜர்

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் ஆஜர்

சென்னை: 'குட்கா' முறைகேடு வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் போலீஸ் அதிகாரிகள் உட்பட, 20 பேர், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர்.மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை தமிழகத்தில் விற்க அனுமதித்ததாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரித்தது.இதில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் என, மொத்தம் 27 பேருக்கு எதிராக, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த விசாரணையின் போது, குற்றப்பத்திரிகை நகலை பெற, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோருக்கு, 'சம்மன்' அனுப்ப உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய்பாபா முன், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என, 20 பேர் நேரில் ஆஜராகினர்.சி.பி.ஐ., தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அலெக்சாண்டர் லெனின் ராஜா ஆஜராகி, ''குட்கா முறைகேடு வழக்கில் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. ''குற்றப்பத்திரிகை நகல் அனைவருக்கும் வழங்கும் வகையில் தயாராக இல்லை,'' என்றார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை, வரும் 23க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.முன்னதாக, வழக்கில், 19வது நபராக குற்றம்சாட்டப்பட்ட முருகன் என்பவர், கடந்த ஜூனில் இறந்து விட்டதால், அவரின் இறப்பு சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.அதேபோல, இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை நகல் பெற்ற ஆறு பேரில், ஒருவர் நேரில் ஆஜராகவில்லை. அவர் மீதான வழக்கும், வரும் 23க்கு தள்ளிவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

siva
அக் 03, 2024 18:58

குட்கா தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பலபகுதிகளிலும் சர்வசாதாரணமாகக் கிடைக்கிறது இன்று அதற்கும் மேலே கஞ்சா, பென்ரையில், கிரோயின் போன்ற பலவும் வலம்வருகின்றன, இவற்றிற்கு யார் பொறுப்பு- தகுந்த நடவடிக்கையில்லை எனில் இளம் சமுதாயமே அழிந்து விடும்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
செப் 10, 2024 09:20

அருமை அருமை. இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் வழக்கை தள்ளி போடுங்கள் மீதம் இருக்கிறவர்கள் ஆயுளும் முடிந்துவிடும். மக்களுக்கு தீங்கு செய்துவிட்டு இருக்கும் வரையில் நன்றாக வாழ்ந்துவிட்டு சென்று விடுவார்கள். இவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் சந்ததிகள்தான் பாவம். சூப்பரான சட்டம். விரைவான நீதித்துறை. விளங்கும் நாடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை