உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 ஆண்டுகளாக சரியும் நிலத்தடி நீர் மட்டம் 544 கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு சிக்கலா?

3 ஆண்டுகளாக சரியும் நிலத்தடி நீர் மட்டம் 544 கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு சிக்கலா?

சென்னை: தமிழகத்தில், நிலத்தடி நீர் மட்டம் மூன்று ஆண்டுகளாக குறைந்து வரும் நிலையில், மழை நீர் சேமிப்பில் கவனம் செலுத்தும்படி, கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தமிழக குடிநீர் வாரியம் செயல்படுத்தி வரும் 544 கூட்டு குடிநீர் திட்டங்கள் வாயிலாக, 13 மாநகராட்சிகள், 70 நகராட்சிகள், 323 பேரூராட்சிகள், 51,048 கிராமங்களை சேர்ந்த 5.02 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர்.

விரிவான ஆய்வு

அத்துடன், தொழிற்சாலைகளின் நீர் தேவையும் பூர்த்தியாகிறது. தினமும், 228 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் நடக்கிறது. காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி, வைகை, முல்லை பெரியாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் பிரதான நீராதாரமாக உள்ளன.தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூனில் தென்மேற்கு பருவமழையும், அக்டோபரில் வடகிழக்கு பருவமழையும் துவங்கும். பருவமழை காலம் டிசம்பரில் முடியும். அதனால், மழை முடிந்த பின் ஜனவரியிலும்; மீண்டும் பருவமழை துவங்கும் முன் மே மாதத்திலும், நிலத்தடிநீர் குறித்து விரிவான ஆய்வு செய்யப்படும். அதற்கேற்ப நிலத்தடி நீரை பயன்படுத்தும் அளவும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆய்வுக்காக, 1,256 கிணறுகளும் அமைக்கப்பட்டு உள்ளன.கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்திய ஆய்வில், மாநிலம் முழுதும் நிலத்தடி மட்டம் குறைந்து வருவது கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது, 2022 ஜனவரியில் 5.78 மீட்டராக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்த நிலையில், மே மாதம் 9.28 மீட்டராக குறைந்தது. இதேபோல, 2023 ஜனவரியில் 5.79 மீட்டராக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. மே மாதத்தில் 8.29 மீட்டராக குறைந்தது. நடப்பாண்டு ஜனவரியில் 6.47 மீட்டராக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்த நிலையில், மே மாதம் 9.87 மீட்டராக குறைந்துள்ளது.

சேகரிப்பு திட்டம்

இதேநிலை தொடர்ந்தால், கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். மழைநீர் சேமிப்பில் உள்ளாட்சி அமைப்புகள் உரிய கவனம் செலுத்தாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. விரைவில் வடகிழக்கு பருவமழை காலம் துவங்கவுள்ளது. எனவே, நிலத்தடிநீர் மட்டத்தை அதிகரிக்க, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்த, குடிநீர் வாரியம் முடிவெடுத்துள்ளது.

'விழிப்புணர்வு பிரசாரம் அவசியம்'

தமிழக குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் மழைநீர் சேமிப்பு திட்டம், 2003 முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கூரை, ஓடு, மாடி வீடுகள், தொழிற்சாலை என, ஒவ்வொரு கட்டடத்திற்கும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டு உள்ளது. கட்டட அனுமதி வழங்கும் போது, உள்ளாட்சி அமைப்புகள், மழைநீர் சேகரிப்பை செயல்படுத்த தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். கட்டுமான பணி முடிந்ததும், அதை ஆய்வு செய்ய வேண்டும்.மூன்று ஆண்டுகளாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. எனவே, கலெக்டர்கள் வாயிலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மழை நீர் சேமிப்பில் கவனம் செலுத்த அறிவுரைகள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கென விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.செய்தி துறையிடம் உள்ள நடமாடும் விளம்பர வாகனங்களில், 3 நிமிடங்கள் வரை ஒளிபரப்பாகும் விழிப்புணர்வு வீடியோக்களையும், மக்கள் கூடும் இடங்களில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேவைப்படும் பட்சத்தில், கட்டட உரிமையாளர்கள் தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தின் தொழில்நுட்ப ஆலோசனையை இலவசமாக பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை