உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமலாக்கத்துறை வழக்கில் நிதி நிறுவன அதிபருக்கு சிறை

அமலாக்கத்துறை வழக்கில் நிதி நிறுவன அதிபருக்கு சிறை

சென்னை : சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், நிதி நிறுவன அதிபருக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிதி நிறுவனம் துவங்கி, அதிக வட்டி தருவதாக, பொது மக்களிடம், 4 கோடி ரூபாய் வரை முதலீடு பெற்றார்.பின், வட்டியையும், அசலையும் திருப்பி தராததால், ராஜாவுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த கோவை சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ராஜாவுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, 2021ல் தீர்ப்பு அளித்தது. இதற்கிடையில், சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழும், ராஜாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது.அமலாக்கத்துறை சார்பில், வழக்கறிஞர் எஸ்.சசிகுமார் ஆஜராகி, ''பொது மக்களிடம் பெற்ற பணத்தை, சட்டவிரோதமாக பல இடங்களில் முதலீடு செய்துள்ளார். அதற்கு ஆதாரங்கள் உள்ளன,'' என்றார். குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளதால், மூன்றாண்டு சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்