சென்னை:வங்கக்கடல், அரபிக்கடலில் சூறாவளி வீசுவதால் ஜூன் 17 வரை மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை, கேரளா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களிலும், கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பெய்து வருகிறது. தமிழகத்தில் கோடை வெயிலின் உச்சபட்ச வெப்பநிலை சூழல் மாறியுள்ளது. ஆங்காங்கே சில இடங்களில் திடீர் மழை பெய்து வருகிறது.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 6 செ.மீ., மழை பெய்துள்ளது. மணலி, திரு.வி.க., நகர், 5; ராயபுரம், பெரம்பூர், திருவொற்றியூர் 4; மாதவரத்தில் 3 செ.மீ., மழை பெய்துள்ளது. தென்மாநிலங்களின் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரியில், ஜூன் 18 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில், ஜூன் 17ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, இயல்பைவிட 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாகும்.குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தெற்கு, மத்திய வங்கக்கடல், கேரளா, கர்நாடகா கடலோரம், லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.