உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வழிப்பறி வழக்கில் 8 பேருக்கு குண்டர் சட்ட காவல் ரத்து

வழிப்பறி வழக்கில் 8 பேருக்கு குண்டர் சட்ட காவல் ரத்து

சென்னை, : வழிப்பறி கொள்ளை வழக்கில் கைதான எட்டு பேரை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைத்ததை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.கோவையில் உள்ள நகை கடைக்காக, பெங்களூருவில் இருந்து தங்க நகைகளை காரில் எடுத்து வந்தபோது, கிருஷ்ணகிரி - தர்மபுரி இடையில் இரு கார்களில் வந்தவர்கள் வழி மறித்தனர். தங்க நகைகள் எடுத்து வந்த காரை கடத்தி சென்று, அதில் இருந்த பொருட்களை எடுத்த பின், விட்டு சென்றனர்.சம்பவம் தொடர்பாக, தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கேரளாவைச் சேர்ந்த சிரில் மாத்யூ உள்ளிட்ட 8 பேரை, கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்தனர். பின், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்க, தர்மபுரி கலெக்டர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, 8 பேர் சார்பிலும், அவர்களது உறவினர்கள், உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர்.இம்மனுக்கள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் என்.சுதர்சன் ஆஜராகி, ''குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது உத்தரவு பிறப்பித்ததில், நீண்ட தாமதம் ஏற்பட்டு உள்ளது. எனவே, ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'கடந்த அக்டோபரில், இவர்கள் கைது செய்யப்பட்டுஉள்ளனர். டிசம்பரில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்க, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 'முதலில் கைது செய்யப்பட்டதற்கும், பின், குண்டர் தடுப்பு சட்டத்தில் காவலில் வைத்ததற்கும் இடையே, நீண்ட தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, கலெக்டர் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது' என கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ