தங்கம் விலை அதிரடி: சவரனுக்கு ரூ.960 உயர்வு
சென்னை:தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு, 960 ரூபாய் அதிகரித்தது. சர்வதேச நிலவரங்களால் உள்நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,705 ரூபாய்க்கும்; சவரன், 53,640 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 91.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று தங்கம் விலை கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 6,825 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு அதிரடியாக 960 ரூபாய் அதிகரித்து, 54,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 3.50 ரூபாய் உயர்ந்து, 95 ரூபாயாக இருந்தது. சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:ஏற்கனவே, அமெரிக்க பெடரல் வங்கி, வைப்பு நிதிக்கான வட்டியை குறைப்பதாக முடிவு செய்துள்ளது. நேற்று ஐரோப்பிய மத்திய வங்கி, வைப்பு நிதிக்கான வட்டியை 0.25 சதவீதம் குறைத்தது. இதனால், உலக முதலீட்டாளர்கள் வைப்பு நிதியில் இருந்து, தங்களின் முதலீடுகளை திரும்ப பெற்று, தங்கத்தில் முதலீடு செய்து வருவதால், உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, நம் நாட்டிலும் அதன் விலை அதிகரித்துள்ளது. இவ்வாறு கூறினார். நாளை ஞாயிறன்று ஓணம் கொண்டாடப்பட உள்ளதும், இனி பண்டிகை காலம் என்பதாலும், தங்கத்தின் விலை உயர்வு நீடிக்கும் என, தங்க வணிக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தொடரவுள்ள வட்டி குறைப்புகள், நீடிக்கும் போர்களால் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் மாற்றங்கள் போன்றவை, தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்திருப்பதால், தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.