உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதை பொருள் விற்பனைக்காக தமிழகத்தில் செயல்படும் சிண்டிகேட் கவர்னர் ரவி குற்றச்சாட்டு

போதை பொருள் விற்பனைக்காக தமிழகத்தில் செயல்படும் சிண்டிகேட் கவர்னர் ரவி குற்றச்சாட்டு

சென்னை:“இளைஞர்கள் மத்தியில், போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள், அதற்கான தேவைகள் அதிகம் இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர்,” என, கவர்னர் ரவி பேசினார்.சென்னை மகளிர் கிறிஸ்துவ கல்லுாரியில் நடந்த போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கவர்னர் ரவி பேசியதாவது:பெண்களுக்கான கதவுகள் இன்று எத்திசையிலும் திறந்துள்ளன. படித்து முடித்து பட்டம் பெறும் பெண்களின் எண்ணிக்கை, ஆண்களை விட கணிசமாக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பஞ்சாப் 1980களில் மிகச் சிறப்பாக இருந்தன. விவசாயம் உள்ளிட்ட அனைத்திலும் முதன்மையாக விளங்கின. ஆனால், அடுத்த 30 ஆண்டுகளில் போதை பொருள் கலாசாரம் அதை சீரழித்து விட்டது.தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை தமிழகத்தில் அதிகம். கொகைன், ஹெராயின் மட்டுமின்றி 'சின்தடிக்' போதைக்கு இன்றைய இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர்.போதை பொருள் பழக்கத்துக்கு அடிமையானால் நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குடும்பமும் நாசாமாகி விடும்.இளைஞர்களிடையே போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள், அதற்கான தேவைகள் அதிகம் இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர்.இவர்களின் முழு நேர எண்ணம் இளைஞர்களை சீரழித்து, நாட்டை பின்னுக்கு தள்ளுவதே. நம் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர், தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநில கடல் பகுதிகளில், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் போதை பொருட்களை டன் கணக்கில் பறிமுதல் செய்கின்றனர்.தமிழகத்திலும் போதை பொருட்களை விற்பனை செய்ய, சில, 'சிண்டிகேட்'கள் உள்ளன.மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பாகிஸ்தானில் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்களை, இவர்கள் நம் நாட்டிற்கு அனுப்புகின்றனர். போதை பொருட்கள் விற்கும் பணத்தில் தான் ஆப்கானிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் உள்ளது.தமிழகம் தேசத்தின் வளர்ச்சிக்கு இயந்திரமாக விளங்குகிறது. இங்கு நல்ல மனிதவளம், இயற்கை வளங்கள் உள்ளன. இவற்றை பிடிக்காத சிலர், போதையை திணிக்க முயற்சிக்கின்றனர். போதை பொருட்கள் குறித்து, நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் நேரம் ஒதுக்கி பேச வேண்டும். அப்போது தான், அவர்கள் பிரச்னைகளை எடுத்துச் சொல்வர். நாம் சுதந்திரம் பெற்ற போது, ஆறாவது இடத்தில் இருந்த நாடு, பின் 11வது இடத்துக்கு சென்றது. இன்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறோம். பெண்களின் வளர்ச்சி என்பது தனிநபர் வளர்ச்சி அல்ல; அது தேசத்தின் வளர்ச்சி.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை