மேலும் செய்திகள்
தமிழகத்திலும் நிரூபணம் ஆகும்!
14-Feb-2025
தஞ்சையைச் சேர்ந்த, மஞ்சள் காமாலை மற்றும் குடல் நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் முரளி:தஞ்சாவூர் மாவட்டம், குலமங்களம் என் பூர்வீக கிராமம். தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., - எம்.எஸ்., படித்தேன். அதன்பின், சென்னை மருத்துவக் கல்லுாரியில் குடல் அறுவை சிகிச்சை படிப்பை முடித்துவிட்டு, தஞ்சாவூருக்கே வந்து விட்டேன். பல பெரிய மருத்துவ மனைகளில் பணிபுரிய வாய்ப்பு வந்தது; ஆனால், ஆளாக்கிய பெற்றோரை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இங்கேயே செட்டிலாகி விட்டேன்.பட்டுக்கோட்டையில் பிரபல மருத்துவர் ரத்தினம் சாரிடம் வேலை பார்த்த போது, அவர் 10 ரூபாய் தான் கட்டணம் வாங்குவார். கடைசி வரை அதை கொள்கையாகவே வைத்திருந்தார். அவர் தான் எனக்கு, 'இன்ஸ்பிரேஷன்' என்றும் சொல்லலாம்.கடந்த 2016ல் சொந்தமாக கிளினிக் ஆரம்பித்தேன். நானும் வறுமையின் வலியை கடந்து வந்தவன் என்பதால், பீஸ் கேட்க மனது வரவில்லை. அதனால், 'பீஸ் வாங்கக்கூடாது' என்று உறுதி எடுத்துக்கொண்டு, வரவேற்பறையில் உண்டியல் வைத்து விட்டேன். 'உங்களால் முடிந்ததை உண்டியலில் போடுங்கள்' என்று கூறி விடுவோம். போடாமல் போனாலும் கேட்க மாட்டோம். இங்கு, 'எண்டோஸ்கோபி' உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகளுக்கும், மற்ற இடங்களை விட குறைவான கட்டணம் தான். பணம் இல்லை என்றாலும், கட்டாயப்படுத்துவது இல்லை; இலவசமாகவே பரிசோதனை செய்து விடுவோம். ஆன்மிகத்தில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. மனிதர்களுக்கு செய்யும் உதவி, கடவுளுக்கு செய்வதற்கு சமம் என்பதை நம்புகிறேன். அப்பா நினைவாக, அர்ப்பணம் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்துகிறேன். உண்டியலில் போடப்படும் பணம், திரும்பவும் மக்களிடமே செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஏழை குழந்தைகளின் கல்வி, மருத்துவம், அன்னதானம் போன்ற விஷயங்களுக்கு அந்த பணத்தை பயன்படுத்துகிறேன். கிளினிக் உள்ள இடத்துக்கான வாடகை, ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட செலவு போக, மிச்சசத்தில் என் வாழ்க்கை வண்டி தடுமாறாமல் ஓடிட்டு இருக்கு. பீஸ் வாங்காததால், எனக்கு பொருளாதார கஷ்டம் ஏற்படுகிறது. ஆனால், ஒரு நாளும் துன்பமாக நினைத்ததில்லை.வலியுடன் வருவோரின் உதட்டில் புன்னகை பூக்க வேண்டும். இதுவே எனக்கான அறம். இதை மீறி விட்டேன் எனில், மருத்துவராக இருப்பதற்கான தகுதியை இழந்து விடுவேன். கஷ்டப்படுவோரின் கண்ணீரை துடைத்து, நோயை குணமாக்கி அனுப்புவதில் கிடைக்கும் நிம்மதியை கோடிகளால் ஈடு செய்ய முடியாது.தொடர்புக்கு: 94432 55699.
14-Feb-2025