| ADDED : ஆக 07, 2024 10:26 PM
மதுரை:நகராட்சிகளிலுள்ள நத்தம் நிலத்தை, அரசு நிலமாக கணினியில் தவறுதலாக பதிவேற்றம் செய்ததை சரி செய்ய நடவடிக்கை கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மூத்த வழக்கறிஞர் வெங்கட்ரமணா - முன்னாள் எம்.எல்.ஏ., தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக அரசு அனைத்து ஆவணங்களையும் கணினிமயமாக்கும் திட்டத்தை மேற்கொண்டது. இதில் நகரங்களிலுள்ள சர்வே எண்களும் அடக்கம். தென்காசி நகராட்சியிலுள்ள நத்தம் சர்வே எண்களின் உரிமையாளர்கள் பெயர்களை, தேசிய தகவல் மையம் - என்.ஐ.சி., பணியாளர்கள் தவறுதலாக நீக்கியுள்ளனர்.அந்த நிலத்தை அரசு நிலம் என பதிவு செய்துள்ளனர். தென்காசி நகராட்சி பதிவேடுகளில் அசல் நில உரிமையாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. தவறை சரி செய்யாததால் காலி இடங்களை யாரும் விற்க முடியாது; பதிவு செய்ய முடியாது.கணினி பிழையால் எந்த ஒரு குடிமகனின் நிலத்தையும் அரசால் கையகப்படுத்த முடியாது. இதனால் தென்காசியில் 20,000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுபோல் கடையநல்லுார், செங்கோட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட இதர நகராட்சிகளில் கணினி பிழை உள்ளது.தென்காசி உள்ளிட்ட இதர நகராட்சிகளில் நத்தம் வகைப்பாடு நிலத்தின் உரிமையாளர்கள் பெயர்களில் உள்ள சர்வே எண்களை தவறுதலாக அரசு நிலம் என கணினியில் பதிவேற்றம் செய்ததை சரி செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: தமிழக நில நிர்வாக கமிஷனர், சர்வேத்துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி ஆக., 27ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.