கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் ஹாலோ பிளாக் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக்
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லி, எம் -சாண்ட், பி -சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக, ஹாலோ பிளாக் எனப்படும் சிமென்ட் கற்கள் தயாரிப்பாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் எம் -சாண்ட், பி -சாண்ட், ஜல்லி ஆகியவற்றுக்கான விலையை அண்மையில் இரு மடங்காக உயர்த்தி உள்ளனர். வலியுறுத்தல்
திடீர் விலை உயர்வால், கட்டுமானம் மற்றும் சாலைப்பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.விலையை குறைக்க வலியுறுத்தி, கட்டட பொறியாளர்கள், ஹாலோ பிளாக் தயாரிப்பாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலெக்டரிடம் தனித்தனியே கோரிக்கை மனு அளித்தனர். எனினும், விலை குறைக்கப்படவில்லை.இதையடுத்து, கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வலியுறுத்தி, மாவட்டம் முழுதும் ஹாலோ பிளாக் தயாரிப்பாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று துவக்கினர்.இதனால், 300-க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் தொழிற்கூடங்கள் செயல்படவில்லை; 3,000 தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை.சி.ஐ.டி.யு., மாவட்ட செயலர் ஸ்ரீதர் கூறியதாவது:மாவட்டத்தில் கட்டுமான தொழில்களை நம்பியே நுாற்றுக்கணக்கான குடும்பத்தினர் உள்ளனர். மணலுக்கு தட்டுப்பாடு உள்ளதை பயன்படுத்தி, கல் குவாரி உரிமையாளர்கள் ஒன்றுகூடி, அரசு ஆலோசனையின்றி, தன்னிச்சையாக ஜல்லி, எம்- சாண்ட், பி -சாண்டுக்கான விலையை இரு மடங்காக உயர்த்தி உள்ளனர். கனிம வளத்துக்கு தன்னிச்சையாக தனியாரே விலை நிர்ணயம் செய்யும் போக்கு, நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. நெருக்கடி
இதனால், மாவட்டம் முழுதும் கட்டுமான பணி பாதிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வரும் பொறியாளர்கள் வேலையை நிறுத்தி வைத்துள்ளனர். விவசாய பணிக்கு மாற்றாக உள்ள கட்டுமான பணியும் நடைபெறாததால் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
திருவாரூரில் உண்ணாவிரதம்
எம் சாண்ட், பி சாண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி, மாநில சிறு கனிமவள உரிமையாளர் சங்கம் சார்பில், திருவாரூரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இதில், சங்க துணைத்தலைவர் கார்மேகம் கூறியதாவது:கல் குவாரிகளின் ஏலத்தொகையை, அரசு குறைப்பதோடு, எம் சாண்ட், பி சாண்ட் உற்பத்தி செலவையும் அரசே நிர்ணயிக்க வேண்டும். குறிப்பாக, ஜல்லியை அத்தியாவசிய பொருளாக அறிவிக்க வேண்டும். சிமென்ட், இரும்பு உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு, 'டேட்டா' விலைபட்டியல் இருப்பது போல, எம் சாண்ட், பி சாண்டுக்கும் டேட்டா முறை அவசியம் தேவை. பீக் ஹவர்சில் கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்து, மின் கட்டண உயர்வை கட்டுப்படுத்தினால் மட்டுமே விலையை குறைக்க முடியும். இந்த பிரச்னைக்கு தீர்வு காண தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு, பேச்சு நடத்தி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அதை வலியுறுத்தவே உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.