உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சூறாவளி காற்று; ஒரு லட்சம் வாழைகள் சேதம்; விவசாயிகள் கவலை 

சூறாவளி காற்று; ஒரு லட்சம் வாழைகள் சேதம்; விவசாயிகள் கவலை 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், ஒரு லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, வேட்டைக்காரன்புதுார், சேத்துமடை, தாத்துார், ஒடையகுளம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், 100 ஏக்கர் பரப்பளவில், வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. போதிய மழை இல்லாததால், லாரி தண்ணீர் விலைக்கு வாங்கி ஊற்றி வாழையை பராமரித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. அதிக பட்சமாக, 94.2 மி.மீ., மழை பதிவானது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக காற்றுடன் பெய்த மழையால், வாழைக்குலையுடன் மரங்கள் சாய்ந்தன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.விவசாயி பாலசுப்ரமணியம் கூறுகையில், ''தென்னையில் ஊடுபயிராக, நேந்திரன், கதளி, கற்பூர வள்ளி வாழை சாகுபடி செய்து, 10 மாதம் நிறைவடைந்து, அறுவடை செய்யும் தருணத்தில் இருந்தது. சூறாவளி காற்றினால், வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. வேட்டைக்காரன்புதுார் மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஒரு லட்சம் மரங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிகிறது. ஒரு டிராக்டர், 2,500 ரூபாய் வீதம் தண்ணீர் விலைக்கு வாங்கி ஊற்றினேன். மொத்தம், நான்கு லட்சம் ரூபாய் தண்ணீருக்கு மட்டுமே செலவானது. இந்நிலையில், வாழை சேதமடைந்துள்ளது கவலை அளிக்கிறது. வாழ்வாதாரம் மீட்டெடுக்க அரசு உதவ வேண்டும்,'' என்றார்.விவசாயிகள் ரத்னவேல், சத்யநாராயணன் கூறுகையில், ''சாகுபடி செய்த வாழை முழுவதும் சேதமடைந்துள்ளது. இதனால், இப்பகுதியில், 75 லட்சம் ரூபாய் முதல், ஒரு கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றனர்.

கணக்கெடுப்பு

ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:

வேட்டைக்காரன்புதுார், சேத்துமடை, தாத்துார், ஒடையகுளம், காளியாபுரம் உள்ளிட்ட பகுதியில் வாழை மரங்கள் சேதமாகியுள்ளன. முதற்கட்ட ஆய்வில், 25 ஆயிரம் மரங்கள் சேதமடைந்தது கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கள ஆய்வு செய்யப்பட்டு முழு விபரம் தெரிவிக்கப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகள், தோட்டக்கலைத்துறையிடம் தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை