உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தியாகிக்கு பென்ஷன் பாக்கி தராததால் அதிகாரி ஆஜராக ஐகோர்ட் பிடிவாரன்ட்

தியாகிக்கு பென்ஷன் பாக்கி தராததால் அதிகாரி ஆஜராக ஐகோர்ட் பிடிவாரன்ட்

சென்னை:பென்ஷன் பாக்கி தொகையை, 97 வயதான சுதந்திர போராட்ட தியாகிக்கு வழங்காததால், பொதுத்துறை அதிகாரி நேரில் ஆஜராக, சென்னை உயர் நீதிமன்றம், 'பிடிவாரன்ட்' பிறப்பித்துள்ளது.

ஆதாரம் இல்லை

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வேலு; 97 வயதான சுதந்திர போராட்ட தியாகி. நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். கடந்த 2021 முதல் சுதந்திர போராட்ட வீரர்களுக்கான பென்ஷன் பெற்று வருகிறார். 1987ல் இருந்து தனக்கு பென்ஷன் பாக்கித்தொகை வழங்க கோரி, உயர் நீதிமன்றத்தில், தியாகி வேலு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. 1987ல் விண்ணப்பித்ததற்கு எந்த ஆதாரம் இல்லை; ஆனால், 2008 டிசம்பரில் இவர் விண்ணப்பம் அனுப்பியது பற்றி, அரசின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, 2008 முதல் 2021 வரையிலான நாட்களுக்கு, பென்ஷன் பாக்கியை கணக்கிட்டு வழங்கும்படி, பொதுத்துறை அதிகாரிக்கு, 2022 ஏப்ரலில், நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார்.

உத்தரவு

இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, கடந்த ஆண்டு ஜூனில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, பென்ஷன் பாக்கி வழங்கப்படாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, தியாகி வேலு தாக்கல் செய்தார்.அரசு தரப்பில் மறுஆய்வு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.அதிருப்தி அடைந்த நீதிபதி, பென்ஷன் பாக்கி தொகை வழங்க, 10 நாட்கள் அவகாசம் வழங்கினார். அதன் பிறகும் வழங்கப்படவில்லை.இதையடுத்து, பொதுத்துறை அதிகாரி அந்தோணிசாமி, வரும் 8ம் தேதி நேரில் ஆஜராக, 'பிடிவாரன்ட்' பிறப்பித்து, நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார்.பிடிவாரன்ட்டை அமல்படுத்தி, 8ம் தேதி அதிகாரியை ஆஜர்படுத்த, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி