மேலும் செய்திகள்
ஆற்றுப்படை மாநாடு: நீதிபதி சுரேஷ்குமார்
26-Aug-2024
பழனி:“தமிழை உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் தமிழக அரசு, தமிழ் மருத்துவத்திற்காக பொதுத்துறை நிறுவனம் ஒன்றை துவங்கினால், ஒவ்வொரு தமிழனும் தன் பங்கை அளிப்பான். முதல் பங்காக என் பங்களிப்பு இருக்கும்,” என உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி பேசினார்.பழனி முருகன் மாநாட்டில் உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் பேசியதாவது:முருகனையும், தமிழையும் பிரிக்க முடியாது. பண்டைய தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் முருகன் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. தொல்காப்பியத்தில் கூட முருகனை வழிபட்டதற்கான சான்றுகள் இருக்கின்றன. பெருமை
சிலப்பதிகாரம், பரிபாடல் உள்ளிட்டவற்றிலும் இடம் பெற்றுள்ளது. முத்தமிழும், முருகனும் பிரிக்க முடியாத ஒன்று. பல தமிழ் அறிஞர்கள், ஹிந்து சமயத் துறவிகள் என பலரை ஒன்றிணைத்து இந்த மாநாட்டை நடத்துவது தமிழக அரசுக்கு பெருமையான விஷயம்.இவ்வாறு அவர் பேசினார்.நீதிபதி புகழேந்தி பேசியதாவது:தமிழே முருகனால் உருவாக்கப்பட்டது. தமிழோடும், தமிழர்களோடும், பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் முருக வழிபாடு கலந்திருக்கிறது என்பதை, சங்க இலக்கியங்களில் இருந்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு இருக்கிறது.குறிப்பாக, ஆயுத எழுத்து. ஆயுத எழுத்தில் வரும் மூன்று புள்ளி, முருகனின் வேலை குறிப்பது போல் இருக்கிறது. பழனியில் முருகன் மாநாடு நடப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முருகன் தலங்களிலேயே அதிகமான பக்தர்களை கவர்ந்திழுக்கும் சக்தி இந்த தலத்திற்கு உண்டு. எங்குமே பார்க்க முடியாத வடிவத்தில் நவபாஷாண வடிவில் முருகன் காட்சி அளிக்கிறார்.தமிழ் மருத்துவத்தின் இயல்பே சித்த மருத்துவம் தான். சித்த மருத்துவத்தின் சிறப்பை உணர்த்தும் பொருட்டு நவபாஷாணத்தால் சிலை வடிவமைக்க போகருக்கு முருகன் உத்தரவிட்டிருக்க வேண்டும். ஏறத்தாழ 2,000 ஆண்டுகளாக முருகன் திருமேனியில் பட்ட சந்தனம் மருந்தாக மாற்றமடைந்து மக்களின் பிணி நீக்கிக் கொண்டுஇருக்கிறது. தமிழ் மருத்துவத்திற்கு சாட்சியாக இருக்கிறார் முருகன்.சித்த மருத்துவம் இங்கு பிறந்தாலும் அதற்கான சிறப்போடு இல்லை. சித்த மருத்துவத்தை தமிழ் மருத்துவமாக மாற்றி ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கினால், நம் மருத்துவம் உலகை வெல்லும். காணிக்கை
உலகின் பெரும்பாலான மருத்துவ முறைகள் ரசாயன முறையில் ஆனவை. ஆனால், நம் மருத்துவம் இயற்கை முறையில் ஆனது. உணவே மருந்தாகி வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.ஒரு மூலிகை ஒரு நோயை எவ்வாறு குணப்படுத்துகிறது; அந்த மூலிகையில் உள்ள எந்தெந்த பொருள் அந்த நோயை குணப்படுத்துகிறது என, நாம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டும். அப்போது தான் உலக அளவில் நம் மருத்துவத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும்.அதற்கு இந்த மாநாடு துவக்கமாக அமைய வேண்டும். தமிழ் மருத்துவத்திற்கு ஓர் ஆராய்ச்சி நிலையம் அமைய வேண்டும். உலகளவில் தமிழ் மருத்துவம் சென்றடைய வேண்டும். அதுதான், முருகனுக்கு நாம் அளிக்கும் காணிக்கையாக இருக்கும்.தமிழை உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் தமிழக அரசு, தமிழ் மருத்துவத்திற்காக பொதுத்துறை நிறுவனம் ஒன்றை துவங்கினால், ஒவ்வொரு தமிழனும் தன் பங்கை அளிப்பான். முதல் பங்காக என் பங்களிப்பு இருக்கும்.இவ்வாறு பேசினார்.நீதிபதி சிவஞானம் பேசியதாவது:கடவுள் உண்டு, கடவுள் இல்லை என்ற விவாதங்கள் நீண்ட காலமாக உலக அளவில் இருந்து வருகின்றன. கடவுள் இல்லை என்ற பெயரில் ஆரம்பித்த அரசு, கடவுள் ஒன்று என்று பேசக்கூடிய ஆதீனங்களையும், தமிழ் அறிஞர்களையும் ஒன்றிணைய வைத்திருக்கிறது.அரசு தன் கடமையை உணர்ந்து இந்த விழாவை கொண்டாடுகிறது. திருமூலர் கூறியது போல, 'அவன் இன்றி நாம் எதுவும் செய்ய முடியாது' என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்திருக்கின்றனர்.இவ்வாறு பேசினார்.
நீதிபதி புகழேந்தி பேசிய பின் மைக்கை வாங்கிய அமைச்சர் சேகர்பாபு, “சித்த மருத்துவத்தை தமிழ் மருத்துவம் என மாற்றி, ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும்; பொதுத்துறை நிறுவனம் ஏற்படுத்த வேண்டுமென நீதிபதி கோரிக்கை விடுத்தார். அவற்றை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிறைவேற்ற முயற்சி எடுக்கப்படும்,” என்றார்.
26-Aug-2024