உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விலங்குகளை கொண்டு செல்லும் விவகாரம் வாரிய செயலருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

விலங்குகளை கொண்டு செல்லும் விவகாரம் வாரிய செயலருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை : விதிகளை மீறி விலங்குகளை கொண்டு செல்பவர்களுக்கு எதிராக, குற்ற நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி., பிறப்பித்த சுற்றறிக்கையை கண்டிப்புடன் அமல்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விலங்குகள் நல வாரியத்தின் சான்றிதழ் இன்றி கால்நடைகளை, அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சோதனை நடத்த, தமிழக அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சுற்றறிக்கை

இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. கடந்த மாதம் 18ம் தேதி டி.ஜி.பி., பிறப்பித்த சுற்றறிக்கை, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:விலங்குகளை பாதுகாக்க, விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தையும், விதிகளையும் அமல்படுத்த வேண்டும் என்பது தான் நோக்கம். விலங்குகள் வதை தடுப்பு விதிகளை மீறி, விலங்குகளை கொண்டு செல்பவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, குற்ற நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி., சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார். தனி நபர்கள் அளிக்கும் புகார்கள் தொடர்பாக, போலீசார் உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும்; சுற்றறிக்கையை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். சந்தேகத்துக்குரிய வகையில் விலங்குகளை கொண்டு செல்வதாகக் கருதினால், சுங்கச்சாவடிகளில் இருப்பவர்கள் வாயிலாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்த வேண்டும்.

ஆஜராகவில்லை

இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பர் என நம்புகிறோம். இந்த வழக்கில், இந்திய விலங்குகள் நல வாரியத்துக்கு 'நோட்டீஸ்' அனுப்பியும், அவர்கள் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. நோட்டீஸ் அனுப்பியும் யாரும் ஆஜராகவில்லை என்றால், விலங்குகள் நல வாரிய செயலருக்கு, 'வாரன்ட்' பிறப்பிக்க நேரிடும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.விசாரணையை ஜூன் 27க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்