வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரு பழமொழி ஞாபகம் வரும்
சென்னை:அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சொற்பொழிவாற்றிய மகாவிஷ்ணு மீது, மாற்றுத்திறனாளிகள் அவமதிப்பு உட்பட, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில், சிறையில் அடைக்கப்பட்டார்.சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், 'பரம்பொருள் அறக்கட்டளை' என்ற அமைப்பை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர், சமீபத்தில் ஆற்றிய சொற்பொழிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து, அரசு பள்ளிகளில் தனியார் அமைப்புகளின் நிகழ்ச்சிகள் நடத்த, அரசு தடை விதித்தது. மேலும், மகாவிஷ்ணு சொற்பொழிவுக்கு அனுமதி அளித்த, அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை மாதிரி மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.மகாவிஷ்ணுவின் பேச்சு தங்களை அவமதிப்பதாக இருப்பதாக, மாற்றுத்திறனாளி விஜயராஜ் என்பவர், சைதாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.இந்நிலையில், மற்றொரு நிகழ்ச்சிக்காக, ஆஸ்திரேலியா சென்ற மகாவிஷ்ணு, மெல்போர்ன் நகரில் இருந்து சிங்கப்பூர் வழியாக நேற்று மதியம், 1:10 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தார். அவரை கைது செய்ய சைதாப்பேட்டை தனிப்படை போலீசார், சர்வதேச விமான நிலையத்தில் தயாராக இருந்தனர்.அவர் வந்ததும், அவரை பிடித்து, வழக்கமான பாதைக்கு பதிலாக, மாற்று வழியில் அழைத்து சென்றனர்.பின், 3 மணி நேரத்திற்கு மேலாக, தனி இடத்தில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கைது செய்தனர். பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், தெரிந்தே ஒருவரை கோபப்படுத்துதல், மதம், இனம், மொழி போன்றவற்றின் வழியே பகைமையை ஏற்படுத்துதல், அவமதித்தல், தவறான தகவல்களை அளித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளை அவமதிப்பதை குற்றமாக கருதும் சட்டத்தின்படியும், மகாவிஷ்ணு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இச்சட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். நேற்று மாலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு, வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில், சிறையில் அடைக்கப்பட்டார்.இதற்கிடையே, மகாவிஷ்ணுவின் நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை என பள்ளி மேலாண்மை குழு மறுத்துள்ளது.பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், தஞ்சாவூரில் நேற்று அளித்த பேட்டி: ஒரு பிரச்னை வரும் போது, உடனடியாக அதை சந்திக்க வேண்டும். பிரச்னைக்கு என்ன தீர்வு; என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சரியான முடிவு எடுத்து விட்டால், நான் அடுத்த பணிக்கு சென்று விடுவேன். மஹாவிஷ்ணு விவகாரம், போலீசார் வசம் வழக்காக சென்று விட்டது. இனி போலீசார் அதற்கான நடவடிக்கையை எடுப்பர். மாற்றுத்திறனாளி சங்கத்தினரை அவமானப்படுத்தியதாக புகார் அளித்துள்ளனர்.இனி போலீசார் -மாற்றுதிறனாளி சங்கத்தினர் பார்த்துக் கொள்வர். மஹாவிஷ்ணு செய்தது தவறா, இல்லையா என்பதில், சட்டம் தன் கடமையை செய்யும்.ஜாதி, மதம் பார்க்காத, அமைதியான மாநிலமாக தமிழகம் இருக்கும் போது, இதுபோன்று மூடநம்பிக்கையை துாண்டுவதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டியது தான் நம் கடமை. ஒவ்வொரு குடிமகனும் அறிவு சார்ந்து சிந்திக்க வேண்டும் என, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. இதை பின்பற்ற வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காவில் பல்வேறு பணிகளில் இருந்தாலும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இனி பள்ளிக்கூடத்தில் நிகழ்ச்சிகள் நடக்கும் போது ஒரு குழு அமைத்து யார், யார் பேச வேண்டும்; என்ன மாதிரி நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்ற நெறிமுறைகள் வரையறுக்க இருக்கிறோம். மிக விரைவில் அதற்கான கமிட்டி அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு பழமொழி ஞாபகம் வரும்