உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரை காப்பீடு திட்டத்தில் சேர்க்க அறிவுறுத்தல்

திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரை காப்பீடு திட்டத்தில் சேர்க்க அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில், திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரையும் சேர்ப்பது குறித்து, மூன்று மாதங்களில் முடிவெடுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில், கான்ஸ்டபிளாக பெலிக்ஸ்ராஜ் என்பவர் பணியாற்றுகிறார். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ளார். அதற்கான பிரீமியம் தொகை சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.

நிராகரிப்பு

பெலிக்ஸ்ராஜ் தந்தை விபத்தில் காயமடைந்ததால், சிகிச்சைக்கான செலவு, 6.54 லட்சம் ரூபாயானது. காப்பீடு திட்டத்தின் கீழ், சிகிச்சைக்கான பணத்தை தரும்படி கோரினார்.நிதித்துறை பிறப்பித்த அரசாணையின்படி, குடும்பம் என்ற வரையறைக்குள் தந்தை வரவில்லை எனக்கூறி, பெலிக்ஸின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பெலிக்ஸ் வழக்கு தொடர்ந்தார். திருமணமான ஊழியரின் பெற்றோரை விலக்கி வைக்கும் பிரிவையும் ரத்து செய்யும்படி கோரினார்.மனுவை, நீதிபதி எம்.சுதீர் குமார் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர்கள் கவுதம் குமார், ஆர்.கோகுலகிருஷ்ணன், நிதித்துறை சார்பில், சிறப்பு பிளீடர் யு.எம்.ரவிச்சந்திரன், சுகாதாரத்துறை சார்பில், அரசு வழக்கறிஞர் சுந்தரம் ஆகியோர் ஆஜராகினர்.நீதிபதி பிறப்பித்த உத்தரவு:இதேபோன்ற ஒரு வழக்கில், தந்தைக்கான மருத்துவ செலவை வழங்க கோரியதை, உயர் நீதிமன்றம் ஏற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வழக்கில், தனி நீதிபதி கூறிய காரணங்களை, இந்த நீதிமன்றமும் முழுமையாக ஏற்கிறது.எனவே, மனுதாரரின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. மனுதாரரை சார்ந்து அவரது தந்தை இருந்தால், அவருக்கான சிகிச்சை செலவை, எட்டு வாரங்களுக்குள் அரசு வழங்க வேண்டும்.புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 2016ல் அமலுக்கு வந்தது. இது ஒரு நலத்திட்டம். இந்த திட்டத்தை வகுக்கும் போது, திருமணமாகாத அரசு ஊழியரின் பெற்றோரை, குடும்பம் என்ற வரையறைக்குள் கொண்டு வந்தனர்; திருமணமான ஊழியரின் பெற்றோரை சேர்க்கவில்லை.அதனால், திருமணமான ஊழியரின் பெற்றோருக்கு, காப்பீடு திட்டத்தில் பலன் பெற உரிமை இல்லை.

தனிக்கவனம்

அரசு ஊழியருக்கு திருமணமாகி விட்டால், பெற்றோரை குடும்பம் என்ற வரையறைக்குள் இருந்து நீக்குவது சட்டவிரோதமானது. எனவே, இந்த விஷயத்தில், அரசின் தலைமை செயலர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின்படி, ஊழியர்களின் பெற்றோரையும் சேர்க்கும் வகையில், திட்டத்தில் உரிய மாற்றங்கள் ஏற்படுத்த, தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.எனவே, தலைமை செயலர் தகுந்த நடவடிக்கை எடுக்க, இந்த உத்தரவின் நகலை அவருக்கு பதிவுத்துறை அனுப்ப வேண்டும். மூன்று மாதங்களுக்குள் இதுகுறித்து முடிவெடுக்கும்படி தலைமை செயலருக்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R Devarajan
ஜூலை 13, 2024 07:51

what next ? in laws to be added neighbours ? Court should have referred the issue to a neutral non govt body. After all there is a vested interest if dealt by the Chief secretary. In any even Govt servants consume over 60% of budget revenues - leaving very little for development


samusthafa kamaal Syed Ahemad
ஜூலை 13, 2024 06:24

Well judgement


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை