சென்னை, : 'நாடு முழுதும் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அதுபற்றி போலீசாருக்கு பயிற்சி அளிக்கும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள், மக்களிடம் அந்த சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆர்வம் காட்டவில்லை' என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மூன்று புதிய சட்டங்களை அமல்படுத்தி உள்ளது. இச்சட்டங்கள் குறித்து, 5.65 லட்சம் போலீசார், சிறை, தடயவியல், நீதித்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது; 40 லட்சம் தன்னார்வலர்களும் பயிற்சி பெற்றுள்ளனர். இச்சட்டங்களை அமல்படுத்தும் நாளில், எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள, 17,500 காவல் நிலையங்களில், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தும்படி, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.அதன்படி, பல்வேறு மாநிலங்களில் நேற்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதிய சட்டங்கள் குறித்து காவல் நிலையங்களில், 'பேனர்கள்' ஒட்டப்பட்டன.ஆனால், தமிழகத்தில், 1,309 சட்டம் - ஒழுங்கு, 241 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில், ஒரு காவல் நிலையத்தில் கூட, புதிய சட்டங்கள் குறித்த சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. புதிய சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவில்லை.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
புதிய சட்டங்கள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் பட்டும் படாமலும் பேசி வருகிறார். புதிய சட்டங்களுக்கு ஏற்ப மென்பொருளும் மாற்றப்பட்டு உள்ளது. அதை மனதில் வைத்து, காவல் துறை, நீதித்துறையினருக்கு விரிவான பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.அவரும், புதிய சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றி வெளிப்படையாக குறிப்பிடவில்லை. அதனால், போலீசாருக்கு பயிற்சி அளிக்கும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள், சிறப்பு நிகழ்ச்சி நடத்தவோ, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவோ ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகத்தில் முதல் வழக்கு
நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு மேல் நடந்த குற்றங்கள் தொடர்பாக, புதிய சட்டங்களின் கீழ் வழக்குகள் பதியப்படுகின்றன. தமிழகத்தில், சென்னை ஆயிரம்விளக்கு காவல் நிலைய எல்லையில், நுங்கம்பாக்கத்தில், 12:10 மணிக்கு மொபைல் போன் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து, பி.என்.எஸ்., என்ற பாரதிய நியாய சன்ஹிதா சடடப்பிரிவு, 304 - 2ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.