உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடிதம் எழுதினால் முதல்வரின் கடமை முடிந்ததா? மீனவர்கள் கைது விவகாரம்; அன்புமணி கொந்தளிப்பு

கடிதம் எழுதினால் முதல்வரின் கடமை முடிந்ததா? மீனவர்கள் கைது விவகாரம்; அன்புமணி கொந்தளிப்பு

சென்னை: தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் கடிதம் எழுதினால் முதல்வரின் கடமை முடிந்து விடுமா? என்றும், தயாராக இருக்கும் கடிதத்தில் மீனவர்களின் கைது எண்ணிக்கையை மட்டும் முதல்வர் ஸ்டாலின் மாற்றுவதாக பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து சென்று வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்து காங்கேசன் துறை சிறையில் அடைத்திருக்கின்றனர். வங்கக்கடலில் பாரம்பரிய உரிமை உள்ள இடத்தில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது.

தவிப்பு

ஜூன் மாதம் 15-ஆம் தேதியுடன் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்த பிறகு வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களில் 200க்கும் மேற்பட்டோர் கடந்த 3 மாதங்களில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய நிலவரப்படி 134 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்துக் கொண்டிருக்கின்றன. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 187 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கைத் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

அத்துமீறல்

வங்கக்கடலில் காலம் காலமாக மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை உள்ளது என்பதால் தமிழக மீனவர்களை கைது செய்யக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழக மீனவர்களை கைது செய்யக்கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு எச்சரித்திருந்தால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால், மத்திய அரசு அமைதியாக இருப்பதால் தமிழக மீனவர்களை சிறையில் அடைப்பது, கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பது போன்ற அடுத்தக்கட்ட அத்துமீறல்களில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது. இதை இந்தியா அனுமதிக்கக் கூடாது.

கடமை

மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காணும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என்றாலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விரைவாக தீர்வு காணச் செய்யும் பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், தயாராக எழுதி வைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில், கைது செய்யப்படும் மீனவர்களின் எண்ணிக்கையை மட்டும் மாற்றி கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்புவதுடன் தமது கடமை முடிந்து விட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். இதை விட பொறுப்பற்ற செயல் இருக்க முடியாது. அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டு மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்த வேண்டும்.

அலட்சியம் வேண்டாம்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதும், அபராதம் விதிப்பதும் இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல் இந்த சிக்கலில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

T.sthivinayagam
செப் 08, 2024 18:48

அமைச்சர் பதவிக்குதான் கொடுப்பினை இல்லை மீனவர் நலனுக்காக மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து பேசலாமே.


R.MURALIKRISHNAN
செப் 08, 2024 18:47

ஒருவரால் எது முடியுமோ அதைதான் செய்ய முடியும்


veeramani
செப் 08, 2024 13:23

தமிழக மீஎனவர்கள் கைது.. முதலில் அரசியல் கட்சி தலைவர்கள் தெளிவான தகவல்களை தெரிந்துகொள்ளுதல் வேண்டும் . தங்கச்சிமடம் மண்டபம், பாம்பன் பகுதி மற்றும் புதுக்கோட்டை ஜெகதாபாட்னம், மல்லிபட்ணம் போன்ற பகுதியில் வசிக்கும் மீன்பிடி தொழிலாளிகள் பரம்பரை குடிமக்கள் கிடையாது. அன்றைய ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நன்கு தெரியும் நமது இந்திய எல்லை எதுவரை என்று. இலங்கையில் யாழ் பகுதி தலைமன்னார் பகுதியில் மீன் பிடிப்பவர்களுக்கு தமிழ் இனம்தான். தற்போது மேல்சொன்ன ஏரியாவில் இருப்பவர்கள் அண்டை மாவட்டம் த்துக்குடி, கன்னியாகுமாரி மற்றும் கேரளாவில் இருந்து வந்தவர்கள். இவர்கள் கடனுக்காக மீன் பிடிப்பவர்கள். எனவே இந்திய எல்லை தாண்டி இலங்கை பகுதியில் வலையை வீசிவிட்டு நாடி இரவில் திருட்டுத்தனமாக இலங்கை பகுதி மீன்களை அபகரிக்கிறார்கள் . நன்கு கவனியுங்கள். இங்கு பிடிக்கப்படும் மீன்கள் அனைத்தும் கேரளாவிற்கு கொண்டுசெல்லப்படுகிறது. நானும் ராம்நாட்க்காரன்தான். எனது ஒரே கேள்வி. எங்களது மாவட்டம் பகுதியில் மீன் பிடுத்து ஏன் கேரளா கொண்டுவிற்கவேண்டும் . இதனால் மீன் விலை அதிகமாகிறது நல்ல மீன்கள் கிடைப்பதில்லை. இது மிக தவறு. வெளி மாவட்டத்தினர் வெளியேறவேண்டும் . எங்கள் பகுதி மீன்கள் எங்களுக்கே . பாரத பிரதமர் மோடி அவர்கள் காலத்தில் ஒரு தமிழ் பேசும் மீனவர் கூட சுட படவில்லை. எனவே அரசியல்வாதிகளே. உங்கள் அரசியலை கடலில் இறக்காதீர்கள். மீனவர்கள் முதல் போ டாமல் அறுவடை செய்கிறார்கள்.