அமைச்சருக்கு கூச்சமில்லையா: அண்ணாமலை ஆவேசம்
சென்னை: 'திருநெல்வேலி மருத்துவமனையில் உயிரிழந்த 4 வயது சிறுவனுக்கு, தமிழக அரசு சார்பில் ஏன் இழப்பீடு அறிவிக்கவில்லை?' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர் இல்லாத நிலையில், அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டதால், தென்காசியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் இறந்த செய்தி, அதிர்ச்சி அளிக்கிறது.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், நான்கு ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.இவற்றில் பெரும்பாலானவை, போதிய டாக்டர்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ளன. டாக்டர்களை நியமிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர்; டாக்டர்கள் நியமனம் எதனால் தாமதமாகிறது? எத்தனை சிறு குழந்தைகளை, தொடர்ந்து பறிகொடுத்து வருகிறோம். இதோ, அதோ என்று, நான்கு ஆண்டுகளில், தமிழக மருத்துவத் துறையை நாசமாக்கிவிட்டு, கொஞ்சம்கூட மனசாட்சி இன்றி, பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க அமைச்சருக்கு கூச்சமாக இல்லையா? இத்தகைய அமைச்சரை, மிக முக்கியமான சுகாதாரத் துறையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் தொடர் உயிரிழப்புகள் தெரியுமா, தெரியாதா? திருநெல்வேலி மருத்துவமனையில் இறந்த சிறுவன் குடும்பத்தினருக்கு, தி.மு.க.,வில் இருந்து உதவி செய்யப்போவதாக கூறியிருப்பது, அரசின் தோல்வியை மூடி மறைக்கவா? தி.மு.க., கொடுக்கும் பணம், குழந்தையின் உயிருக்கு ஈடாகி விடுமா? அரசு ஏன் பொறுப்பேற்கவில்லை; அரசு சார்பில் ஏன் இழப்பீடு அறிவிக்கவில்லை.அரசின் சுகாதாரத் துறை ஒழுங்காக செயல்பட, இன்னும் எத்தனை உயிர்களை பறிகொடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தனியாருக்கு ஆதரவு காட்டுவதா?
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பலன் அளிக்காமல் போனபின், அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இதனால், அரசு மருத்துவமனைகளில் இறப்புகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. ஆனால், பொத்தாம் பொதுவாக இறப்புகள் அதிகம் என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது.அரசு மருத்துவமனைகளை குறை கூறி, யாருக்கோ லாபம் ஏற்படுத்தும் முயற்சியில், அண்ணாமலை ஈடுபடுகிறார். அரசு மருத்துவமனைகள் மீது மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. அதன் தரத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்.திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், ஊசி ஒவ்வாமை ஏற்பட்டுதான், 4 வயது சிறுவன் உயிரிழந்தார். இது தெரியாமல், அண்ணாமலை பொய் பேசுகிறார்.மருத்துவ சேவையில் இருக்கும் தனியாருக்கு ஆதரவாக அண்ணாமலை செயல்படுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் பற்றாக்குறை!
அரசு மருத்துவமனையில், டாக்டர் பற்றாக்குறை உள்ளது. நர்ஸ்களை நம்பி, சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவதில்லை. மாத்திரைகளும் சாம்பிரதாயத்திற்கு கொடுக்கின்றனர். இதன் காரணமாகவே, அதிக செலவானாலும் சரி என, தனியார் மருத்துவமனையை நோக்கி மக்கள் படையெடுக்கின்றனர். தெருவிற்கு தெரு, தனியார் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் வந்து விட்டன.கே.சாய்ராம், 58, சமூக ஆர்வலர், திருவொற்றியூர்அடிப்படை மருத்துவம்!அரசு மருத்துவமனைகள் என்பதை காட்டிலும், பாமர மக்கள் சாதாரண நோய் பிரச்னைக்காக செல்லும், ஆரம்ப சுகாதார மையங்களில், மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும், சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போன்றவற்றை பரிசோதிக்க, வெளியே தனியாருக்கு தான் செல்ல வேண்டியுள்ளது. பாதி மருத்துவம் அரசு மருத்துவமனையிலும், மீதியை தனியாரிலும் பார்ப்பதற்கு பதிலாக, முழுதுமாக தனியார் மருத்துவமனையில் பார்த்துக் கொள்ளலாம். நேரம் மிச்சம் என்ற எண்ணம் தோன்றுகிறது.- கே.தேவிபாலா, 45, எர்ணாவூர், சென்னை