| ADDED : ஜூன் 02, 2024 11:22 PM
கொடைக்கானல் : கொடைக்கானல் - தாண்டிக்குடி மலைப்பகுதியில் நேற்று 2 மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தநிலையில் நடுரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கொடைக்கானல் சுற்றியுள்ள பகுதிகளில் இரு தினங்களாக மழை பெய்கிறது. நேற்று மதியம் 2:00 மணிக்கு மிதமாக தொடங்கிய மழை தொடர்ந்து கனமழையாக 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது. இடி ,மின்னலுடன் சூறைக்காற்று வீசியதால் ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.தாண்டிக்குடி கே.சி பட்டி பகுதியில் கனமழைக்கு மரம் சாய்ந்து அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இப்பகுதியில் சிறிது நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. மின்தடை ஏற்பட்டு மலை கிராமங்கள் இருளில் மூழ்கியது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. தற்போதைய மழை மலைத்தோட்டப்பயிர்களான காபி, மிளகு, வாழை, ஏலக்காய் உள்ளிட்ட பயிர்களுக்கு ஏற்றதாக அமைந்தது. அதே நிலையில் தாழ்வான பகுதியில் பயிரிடப்பட்ட பீன்ஸ், சவ்சவ், அவரை உள்ளிட்ட குறு விவசாய பயிர்களை தண்ணீர் சூழ்ந்தன.